யூலை 24
“உக்கிரம் என்னிடத்தில் இல்லை” ஏசாயா 27:4
தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில் திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும்.
தேவன் அன்பானவர்
தன் சுதனையே தந்தார்
என்றும் நம்மை மறவார்
கடைசிவரை காப்பார்.