முகப்பு தினதியானம் ஒகஸ்ட் என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்

என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்

ஓகஸ்ட் 20

“என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்” ஏசாயா 51:5

இந்த நம்பிக்கை நல்லது. ஏனென்றால், அந்தப் புயம் சர்வ வல்லமையில் பலப்பட்டு, சர்வ ஞானத்தால் நடத்தப்பட்டு, உருக்கமான அன்பினால் பிரயோகிக்கப்படுகிறது. நாம் சாயும்படி நம்மை ஆதரிக்க அப்புயம் உள்ளது. நமக்காக கிரியை செய்யவும், நமக்கு வேண்டியதை சேர்த்து வைக்கவும், அது நீட்டப்பட்டிருக்கிறது. நமக்காகப் போராடவும், சத்துருவின் கையிலிருந்து விடுவிக்கவும், பெலவீனத்தின்போது நம்மை ஆதரிக்கவும், வியாதியிலும், கண்ணீரிலும் இருந்து நம்மைத் தூக்கி விடவும், இந்தக் கரம் நமக்கு நீட்டப்பட்டிருக்கிறது. இது பிதாவின் சர்வ வல்லமையான கரம். இந்தப் புயம் வானத்தையும், பூமியையும் தாங்கும் புயம்.

நம்முடைய சகோதரனுடைய புயமானாலும், பாதாளத்தின் வாசல்களை அடைத்து, துஷ்ட ஆவிகளைப் பிடித்து அடக்குகிற புயம். இந்தப் புயத்தின்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது கரத்தின்மேல் நம்பிக்கை வைப்பது வீண். மற்று எதிலும் நமது நம்பிக்கை வளர்ந்துவிட கூடாது. எப்போதும் எதிலும் கர்த்தரின் புயத்திலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். தேவ வசனம் இப்படிச் சொல்கிறது. தேவன் அதுதான் சரி என்று கட்டளையிட்டிருக்கிறார். அவர்கள் அந்தகாரத்திலும், வருத்தத்திலும் என்னை நம்புவார்கள். என்னுடைய வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும். அது அவர்களுக்குத் தேவையென்று அறிவார். மற்றவை எல்லாம் அவர்களை மோசப்படுத்திவிடும். தேவன் கூறியுள்ளார். அதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தேவனுடைய வல்லமையான கரத்தில் நம்பிக்கை வைத்து அவருடைய மகத்துவமான செயலைப் பின்பற்றி, அவரின் கரத்தின் கிரியையை நம்பியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் பாக்கியராய் இருக்கமாட்டோம்.

சகலத்தையும் சிருஷ்டித்த
தேவனுடைய கரமே
எங்கள் பெலன் அடைக்கலம்
என்றும் எங்கள் துணையே.