முகப்பு தினதியானம் அக்டோபர் என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

அக்டோபர் 20

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?” எரேமி. 32:27

சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும் அவருக்குக் கீழானதே. அவர் யாவற்றையும் ஒழுங்காகவே ஏற்படுத்தியுள்ளார். கிரமமாக அவர் யாவற்றையும் நடத்துகிறார். அனைத்து காரியங்களையும் தம்முடைய சொந்த சித்தத்தின்படியே செய்கிறார்.

சில வேளைகளில் நாம் பல சிக்கல்களில் அகப்பட்டுவிடுகிறோம். மனிதர் உதவி செய்ய மறுத்து விடுகிறார்கள். நமது விசுவாசம் குறைகிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சோர்வடைந்து நாம் பயப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தலையிடுகிறார். நம்மைச் சந்தித்து என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ? அதை என்னிடத்தில் கொண்டுவா. என்னை முற்றிலும் நம்பி உன்னை முற்றும் அர்ப்பணி. என் சித்தம் செய்யக் காத்திரு. அப்பொழுது நான் உன் காரியத்தைச் செய்து முடிப்பேன். அதை எவராலும் தடுக்க இயலாது என்கிறார்.

அன்பானவர்களே, உங்கள் கேடுகள், உங்கள் சோதனைகள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் தேவன் உங்களை விடுவிக்கக் கஷ்டப்படுபவரல்ல. உங்களுக்கு வரும் தீங்கை நீக்கி, உங்கள் துன்பங்களிலிருந்து உங்களை இரட்சிப்பார். உங்களது பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கொடுக்கப்பட்ட இவ்வசனத்தில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும். நம்பிக்கையை வளர்க்கட்டும். உங்களுக்குத் தைரியம் தரட்டும். ஜெபிக்க உங்களை ஏவி விடட்டும். உங்கள் பெலத்தையே நோக்குங்கள். பெலவீனத்தை அல்ல. விடுவிக்க வல்லு அவருடைய கிருபையைத் தேடுங்கள்.

என் தேவனால் ஆகாதது
ஒன்றுண்டோ? அவர்தம்
கிருபை எனக்கு
எப்போதும் போதுமன்றோ!