முகப்பு தினதியானம் இராக்காலம் வருகிறது

இராக்காலம் வருகிறது

யூலை 02

“இராக்காலம் வருகிறது.” யோவான் 9:4

இரவு என்பதில் பயமும், திகிலும் உண்டு. இராக்காலம் மரணத்தின் அறிகுறி. மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது. ஆகவே, நிகழ்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். மரணம் வரும்போது நம்முடைய எல்லா வேலைகளும் முடிந்து விடும். முடியாவிட்டால் அரைகுறையாய் அதை விட்டுப்போக வேண்டும். ஆதலால் காலம் இருக்கும்போதே அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மரணம் வரும்போது நாம் சிநேகிதரை விட்டுப் போக வேண்டும். ஆகவே உயிருள்ளபோதே அவர்கள் நட்பைக் காத்துக்கொள்வோமாக. ஒரு நாள் மரணம் வரும்போது எல்லாரையும்விட்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம். நம்முடைய ஆத்துமா அமைதியாய் இளைப்பாறும். அது ஆண்டவர் சமுகத்தில் தங்கி அங்கே இளைப்பாறி திருப்தி அடையும்.

இராக்காலம் வருகிறது. அது தூரத்தில் இல்லை. சிலருக்கு அது வெகு அருகில் இருக்கலாம். திடீர் என்றும் வரலாம். ஆகவே நாம் ஆயத்தமாய் இருக்க எச்சரிக்கப்படுகிறோம். இயேசுவை விசுவாசித்தவர்களாக காலத்தை ஆதாயப்படுத்தி, நாள் முழுவதும் வேலை செய்து, இரவுக்கு ஆயத்தப்பட்டவர்களாய் இருப்போமாக. நம்முடைய வேலை முடிந்தது. தேகம் இளைத்தது. பரம பாக்கியத்தின் பேரில் ஆசை மிகுந்தது. எப்போது பேரின்ப வீட்டுக்குப் போகலாம் என்று சந்தோஷமாய் எதிர்பார்க்கிறவர்களைப்போல இருக்கக்கடவோம்.

தேவனிடம் கிட்டி சேர்ந்து
அவரைப்போல் இருப்பது
எப்போ கிடைக்கும், அப்போ
பாவம் முற்றிலும் ஒழியும்.