முகப்பு துண்டு பிரதிகள் கடமையா – பாசமா

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)