ஓர் அனுபவம்!
ஒவ்வொருவருக்கும் பலவிதமான அனுபவங்கள் உண்டு. கிராமத்திலுள்ள ஒருவர் முதல் முறையாக பட்டணத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது ஓர் ஆச்சரியமான அனுபவமாக இருக்கும். தாய் நாட்டை விட்டுகடல் கடந்து கப்பலிலோ, அதிலும் சிறப்பாக ஆகாய விமானத்திலோ வெளி நாடுகளுக்குச் சென்று திரும்புவது மகிழ்ச்சிகரமான ஒரு அனுபவமாக இருக்கும். பெருந் தலைவர் ஒருவர் நம் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் அல்லவா? பத்து மாதங்கள் சுமந்து குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு பெண்மணிக்கு விலையேறப்பெற்ற அனுபவமாக இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவர் தன்னுடைய கடின உழைப்பு, அயராத முயற்சி. கட்டுப்பாடு, திறமை காரணமாக போட்டியில் வெற்றி பெறுவது பெருமிதம் அடையக்கூடிய அனுபவமாக இருக்கும்.
மேற்கூறிய அனுபவங்களை விடயெல்லாம்சிறப்பானது ஆன்மீக அனுபவமாகும். ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டு அவரோடு நிலையான உறவிற்குள் வருவது எல்லாரும் பெற வேண்டிய ஓர் ஒப்பற்ற அனுபவமாகும்! மனித உள்ளத்தில் இறைவன் தங்க விரும்புகிறார். மனிதன், இறைவனின் அவதாரமாகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்வது ஓர் உன்னதமான அனுபவமாகும். இருள் இருந்த இடத்தில் வெளிச்சம் வருவதைப் போலவும் வெறுமையும் குறைவும் மாறி நிறைவடைவதைப் போலவும் உயிரற்ற நிலைமாறி உயிர் பெறுவதைப்போலவும் இந்த அனுபவம் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவமாகும். உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா? நீங்கள் இந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்களா?
ஓர் அறிமுகம்!
2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளுதல் அவசியம். இயேசு கிறிஸ்துவை, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஓர் மகாத்மாவாக மக்கள் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்துவை அல்லாமல் மக்கள் மறுமை வாழ்வில் மோட்ச பாக்கியத்தை அடைய முடியாது. இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்புவதும் அவரை ஏற்றுக்கொள்வதும் அவரைத் தொடர்ந்து பின்பற்றுவதும் ஓர் அற்புதமான புதிய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஓரளவிற்கு கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரைப் பற்றிய சரியான உண்மைகளை தெரிந்துகொள்வது உங்களுடைய வாழ்வை நிறைவுபடுத்தும் வாய்ப்பாக அமையமுடியும். இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்!
ஓர் அழைப்பு!
இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் சோர்வுறச் செய்யும் சூழ்நிலைகள் பல உண்டு’ விடுதலைக்காகவும் ஏங்கி நிற்கும் மக்களை ஆண்டவராகிய இயேசு அழைக்கிறார் “வருந்தி மன பாரத்தினால் சோர்வுற்றவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் உள்ளத்தை இளைப்பாற்றி உங்களுக்கு என் ஆறுதலை அருளிச் செய்வேன்’ என்று ஆண்டவர் இயேசு அன்புடன் அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணத்திற்குப் பின் உள்ள நித்திய வாழ்வை மோட்சத்தில் நீங்கள் அவருடன் என்றென்றும் வாழவேண்டும் என்று உங்களை அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவது ஆசீர்வாதமே. அதற்கு மேலாக உலகத்தின் பல கவர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் பரிசுத்தமாய் வாழ்வதற்கென தம்முடைய வழிகளில் நடக்க ‘நீ என்னை பின்பற்றி வா’ என்று இயேசு இன்று உங்களை அழைக்கிறார்!