முகப்பு துண்டு பிரதிகள் விலை மதிப்பிடமுடியாத முத்து

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய நண்பர் நிற்பதை அடையாளம் கண்டுகொண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், இருவரும் அடிக்கடி சந்தித்து மத சம்பந்தமான விஷயங்களை பேசுவர். சாபு இந்துமதப் பற்றுடையவனாக இருந்த போதிலும், தன் கிறிஸ்தவ நண்பரிடம் அன்போடு பழகுவான்.

இப்போது படகு தன் துறையை அடைந்துவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபின், சாபுவின் குடிசையை நோக்கி பேசிக்கொண்டே நடந்தனர். ‘சாபு, உன்னைப் பார்க்கும்போது, மிகவும் சோர்ந்திருப்பதுடன், வயதாகிவிட்டபடியால் உன் நடையும் தள்ளாடுகிறது, இதுவே நீ கடைசி முறையாக முத்துக்குளிக்கச் சென்றதோ? என எண்ணுகிறேன்’ என்றதும், ‘ஆம், இனி இந்த கடலோரப் பகுதியில் நான் நடமாடப் போவதில்லை. மேலும், நான் விருத்தாப்பியம் அடைந்ததால் முத்துக்குளிப்பதும் சிரமமாக உள்ளது. என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் மிக அருகாமையில் இருக்கிறது, பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கை நதியில் நீராடி மனநிம்மதியடையப்போகிறேன். ஏனெனில் என் வாழ்நாள் எல்லாம் எதற்காக ஏங்கினேனோ அது விரைவில் நிறைவேறப்போகிறது” எனச் சொல்லி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.

சாபுவின் கிறிஸ்தவ நண்பர், பலமுறை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அவனுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் அதை அன்போடு விவரிக்க ஆரம்பித்தவர், பாவ மன்னிப்பானது எந்த புண்ணிய நதியில் நீராடுவதாலும் கிடைப்பதல்ல. ஆனால், பாவங்கள் மன்னிக்கப்பட ஒரே வழி யாதெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக மட்டும் தான் கிடைக்கக் கூடியது. மேலும், இயேசுவானவர் நமக்கு இந்த மாபெரும் மீட்பையும், சந்தோஷத்தையும் இலவசமாக வழங்குவதற்காக சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்ததை விளக்கினார்.

இதை அடிக்கடி கேட்ட சாபு, நகைப்புடன் “நீர் சொல்லும் கிறிஸ்தவம் இலகுவானது, ஏனெனில் விசுவாசிப்பவனுக்கு இலவசமாக கிடைக்கிறதே ! நான் இரட்சிப்பை பிரயாசப்பட்டு சம்பாதிக்க விரும்புகிறேன்’ என்றான். இந்நேரத்தில் சாபுவின் சிறிய குடிசையை அடைந்துவிட்டார்கள். தன் நண்பரை அன்போடு வரவேற்றான் சாபு.

“நான் புண்ணிய யாத்திரை புறப்பட போவதால், நம் நட்பின் அடையாளமாக ஒரு வெகுமதியை உங்களுக்கு கொடுக்கப் போகிறேன்” என்றவன், குடிசையின் ஒரு மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு துணி உருண்டையை தேடிக் கொண்டு வந்து மெதுவாகப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! சாபுவின் உள்ளங்கையில் நன்கு இழைக்கப்பட்ட, பிரகாசமான முத்து ஜொலிப்பதைக் கண்ட அவனுடைய நண்பரின் மூச்சு ஒரு விநாடி நின்று விட்டது. “எவ்வளவு அழகான ஒப்பற்ற முத்து ! இது அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட வேண்டியது,” என்று அவர் சொன்னதும், சாபு ஆம், நான் என் ஆயுள் காலத்தில் பார்த்த முத்துக்களில் இதுவே பழுதற்றது. இதை நான் ஒரு விசேஷமான காரணத்திற்காக வைத்திருந்தேன். எனக்கொரு மகன் இருந்தான், அவன் முத்துக்குளிப்பதில் மிகவும் திறமைசாலி. பல மணி நேரம் மூச்சடக்கும் சக்தியுடையவனான அவன், ஒரு நாள் ஆழமான இடத்திற்குச் சென்று தேடிக்கொண்டு வந்ததுதான். இந்த விலையேறப்பெற்ற முத்து.’ எனக் கூறிவிட்டு அழஆரம்பித்தான் சாபு. ‘நண்பரே, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவன் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான்’, என்றவன், “நான் உமக்கு வெகுமதியாகக் கொடுக்கும் முத்தின் விலை மதிப்பு என் அன்பு மகனின் உயிர்” என்று கூறி கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

“இதையா எனக்குக் கொடுக்கப்போகிறாய்? வேண்டாம், இதை இலவசமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். யாரிடமாவது கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது பாடுபட்டு வாங்கிக்கொள்கிறேன் ஆனால்,வெகுமதியாக இதை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
‘நண்பரே, நீர் இதற்கு போதுமான தொகையை கொடுக்கவே முடியாது. ஏனெனில், இது விலை மதிப்பிட முடியாதது. அத்தோடு என் அன்பு மகன் தன் உயிரையே கொடுத்து சம்பாதித்ததல்லவா ! இதன் விலை என் மகனின் உயிர்’ என்றான் சாபு.

“சாபு, சற்று முன் சொன்னது என்ன? கிறிஸ்தவம் மிகவும் இலகுவானதும், இலவசமானதும் என்றல்லவா ! எதையாவது கொடுத்து சம்பாதிப்பதுதான் மதம் என்பது உன்னுடைய தவறான கருத்து. அருமையான நண்பா, உன்னுடைய இரட்சிப்புக்காக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் உயிரையே ஈடாகக் கொடுத்து அதை சம்பாதித்திருக்கிறார். நீ மீட்கப்பட்டு, சந்தோஷமுள்ளவனாக வாழ, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். விசுவாசிக்கிற எவனும் எந்தக் கிரயமுமின்றி இலவசமாக இரட்சிக்கப்படலாம்’ என்றவர் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்பதையும் விவரித்தார். தொடர்ந்து, “இந்த முத்தின் விலை உன் அன்பு மகனின் உயிர் என்பது உண்மையே, அதுபோல தேவகுமாரனாகிய இயேசு இரட்சகர் தன் உயிரையே கிரயமாகக் கொடுத்து சம்பாதித்திருக்கும் இரட்சிப்புக்கு நீ விலை கொடுக்க முடியுமா? இது முற்றிலும் இலவசமான ஈவாகும்’ என்றார்.

வயதான சாபு கண்ணீரோடு, தேவனுடைய அன்பை எண்ணி தன்னையே அந்த அன்புள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்தான். அமைதியாக சிறிது நேரம் முழங்காலிலிருந்து எழுந்ததும், சாபுவின் நண்பர் தன்னிடமிருந்த தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து கீழ்கண்ட பகுதிகளை உரக்கப் படித்தார். “….நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே. குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்’. (ரோமர் 5:6)

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. (1.யோவான் 5:11,12)

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’. (எபேசி. 2:8,9)