ஜீலை 28
“நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்” யோவான் 13:18
விசுவாசிகள் எல்லாரும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள். தமது சுய சித்தத்தின்படி அவர்களைத் தெரிந்துகொண்டார். பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்டவர்களாகவே அவர்களைத் தெரிந்துகொள்கிறார். தமது ஜனங்களை, தமது மணவாட்டியாகவும் ஊழியர்களாகவும், சாட்சிகளாகவும் இருக்கத் தெரிந்துகொண்டார். அவர் இவர்களைத் தெரிந்துகொண்டதால்தான் இவர்கள் அவரைத் தெரிந்துக்கொண்டார்கள். அவர் தாம் தெரிந்துக் கொண்டவர்களை அறிவார். ஆகவே அவர்களுடைய மனம், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, பயம், துக்கம், குறைவு இவைகளையெல்லாம் அறிந்திருக்கிறார். தேவன் இவர்களைத் தெரிந்துக்கொண்டதால் ஆறுதல் அடைகிறார்கள். இவர்களை அங்கீரித்து மற்றவர்களினின்று இவர்களை வித்தியாசப்படுத்துகிறார்.
இப்படி இயேசு தம்முடைய ஜனங்கள் எல்லாரையும் அறிந்திருக்கிறபடியால் அவர் தேவனாய் இருக்க வேண்டும். தேவனைத் தவிர வேறு யாரும் எண்ணமுடியாத இக்கூட்டத்தாருடைய தொகை, பேர், இருப்பிடம், எண்ணம், மனநிலை எல்லாவற்றையும் திட்டமாய் அறிந்திருக்க முடியும். அன்பர்களே நம்முடைய பெருமையைத் தாழ்த்த, விசுவாசத்தை கனம்பண்ண, குறைகளை நிறைவாக்க நம்முடைய வழிகளை உறுதிப்பண்ண, நற்கிரியைகளுக்குப் பலன் அறிக்கத்தக்கதாக அவர் நம்மை அறிவார். இயேசு நான் எங்கிருந்தாலும், வீட்டிலும் வெளியிலும், தேவாலயத்திலும் எப்படி நடக்கிறேன் என்று அறிவார். தகப்பன் தன் பிள்ளையை அறிந்திருக்கிறதுப்போலவும், கணவன் தன் மனைவியை அறிந்திருக்கிறதுபோலவும், அவர் தாம் தெரிந்துகொண்டவர்களை அறிவார். இவ்விதமாய் என்னையும் அறிவார்.
தேவன் நம்மை மீட்டது
நித்திய சந்தோஷ கிருபையே
நேசத்தால் சேர்த்தார்
இலவசமாய் மீட்டார்.