யூன் 22
“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14
சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.
நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.