அக்டோபர் 13
“கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்” ஆப. 3:2
தேவன் எப்போதும் தம்முடைய கிரியைகளுக்குப் புத்தியிரளிக்க வல்லவர். அவர் இச்செயலைத் தொடங்கி, அதை நடத்துபவர். அதைத் தாமாகவே முடிக்கவும் வல்லவர். தம்முடைய கிரியைகளைப் பல உபகரணங்களைக் கொண்டு செய்து முடிக்க வல்லவர். நாம் எழும்புதல் அடைய வேண்டும் என்று நமக்குக் கூறகிறார். அவ்வாறு செய்ய நம்மைத் தூண்டிவிடுகிறார். நாம், பல நேரங்களில் அவருடைய பாதத்தருகில் அதிக நேரம் செலவிட மறந்து விடுகிறோம். அவரின் சமுகத்தில் அதிகம் ஜெபிக்காமல் இருந்து நேரத்தை வீணாக்கி விடுகிறோம். ஆனால், அவர் சமுகத்தில் அதிக நேரம் செலவிடும் பொழுது ஒரு வேகத்தையும் தைரியத்தையும் பெறுகிறோம். அப்போது அந்தத் தீர்க்கன் சொன்னதைப்போல் உம்முடைய ஜனங்கள் உம்மில் மகிழும்படிக்கு எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரா என்று நாமும் சொல்லலாம்.
கர்த்தர் தமது கிரியைகளை உயிர்ப்பிக்கும்போது நம்முடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துவார். நமது நம்பிக்கையை வளர்ப்பார். நமது அன்பிற்கு அனல் மூட்டுவார். தாழ்மையைக் கற்றுக்கொடுப்பார். நமது பக்தி வைராக்கியத்தை உறுதிப்படுத்துவார். நம்முடைய எழுப்புதலின் ஆவியைத் தூண்டிவிடுவார். அப்போது ஜெபம் நமக்கு இனிமையாகும். ஆலயம் அருமையாயிருக்கும். சபையில் தேவ மக்கள் மகிழ்ச்சியோடு உலாவும் நந்தவனம்போல் இருக்கும். வசனம் விருத்தியாகும். மோட்சத்தையே நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்போம். தேவன் நம்மை என்றும் உயிர்ப்பிக்க வல்லவராகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உயிர்ப்பிக்கும் ஆவியானவர் நம்மை அவரண்டை நேராக நடத்துவார்.
உமது தயவினாலே
எம்மை உயிர்ப்பியும்
நாங்கள் ஒளிவிட்டெழும்ப
கிருபை பாராட்டியருளும்