ஒகஸ்ட் 10
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து…..” 1.நாளா.22:18
விசுவாசிக்குக் கிடைத்திருக்கும் பெரிய சிலாக்கியம் கர்த்தர் எப்போதும் அவனோடிருப்பதுதான். நான் உன்னோடிருப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் தகப்பனைப்போல உனக்காக கவலைப்படும் சர்வ வல்லமையுள்ள தேவனாக உன்னை பாதுகாக்க உன்னோடு இருக்கிறார். வருத்தத்தில் உனக்கு ஆறுதல் தரவும், கலக்கத்தில் உன்னை நடத்தவும், பெலவீனத்தில் உன்னைப் பெலப்படுத்தவும், மோசத்திலிருந்து உன்னைத் தப்புவிக்கவும், அவர் உன்னோடிருக்கிறார். தேவன் சொன்னபடியே இப்பொழுதும் செய்து வருகிறார். சோர்ந்த ஆத்துமாவே, சோதிக்கப்பட்ட துன்பப்பட்ட கிறிஸ்தவனே, வியாதிப் படுக்கையில் கிடைக்கும் பக்தரே, தேவன் உன்னோடு இல்லையா? உன் தேவனேயன்றி உனக்குதவி செய்தது யார்? உன்னைத் தாங்கி உனக்குச் சவரட்சணை செய்வது யார்? நம்பிக்கையற்றுப் போகாதபடிக்கு உன்னைக் காப்பாற்றுகிறது யார்? அவர் உன்னோடு இருக்கிறார்.
அப்படியானால் ஏன் நீ பயப்படுகிறாய்? ஏன் முறையிடுகிறாய்? அவரை நோக்கிப் பார். அவரை நோக்கிக் கூப்பிடு. அவரிடம் கெஞ்சு, அவரை நம்பி, கர்த்தர் உன்னோடிருப்பாரானால் சாத்தானையும், உலகத்தையும் மரணத்தையும்கூட எதிர்த்து அவைகளை மேற்கொள்வாய். இன்றிரவு, தேவன் உன்னோடிருக்கிறாரென்று உணர்ந்துகொள். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். ஆகவே, நான் பயப்படேன் என்று சொல், நான் நம்பி பயப்படாமல் இருப்பேன். ஏனென்றால் கர்த்தராகிய யோகோவா என் பெலனும் என் கீதமுமானவர். அவர் என் இரட்சிப்புமாய் இருக்கிறார்.
தேவன் நம்மோடிருக்கிறார்
சேனையின் கர்த்தர் அவரே
அவர் நமக்குத் துருகம்
அவரே நமது அடைக்கலம்.