முகப்பு தினதியானம் உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.