செப்டம்பர் 30
“உண்மையுள்ள தேவன்” உபா. 7:9
மானிடரில் உண்மையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஆனால், நமது தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் அறிகிறோம். ஆனால் நாம் அவரை நம்பலாம். அச்சமன்றி அவரை நெருங்கித் தாராளமாக அவரிடத்தில் யாவற்றையும் மனம் திறந்து சொல்லலாம். அவர் உண்மையுள்ளவராகையால் நம்மைப் புதியவர்களாக மாற்றுகிறார். நம்மைக் கண்டிக்கிறார். தம்முடைய சித்தத்தை நமக்கு அறிவிக்கிறார். துன்பங்களில் நம்மை ஆதரித்து, நம்முடைய கஷ்டங்களில் நம்மை மீட்கிறார். நமது பகைவரை வென்று அடக்குகிறார். நமது இருளான நேரங்களில் நமக்கு வெளிச்சம் தருகிறார்.
தேவன் உண்மையுள்ளவர் என்பது நமக்குக் கிடைக்கும் தேவ இரக்கத்திலும், நம்மைப் பாதுகாக்கும் கிருபையிலும், நமது குறைகளிலும், நாம் சுமக்கும் சிலுவையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மகத்துவங்களை நமக்குக் காண்பிக்கவும், தமது வசனத்தை அதிகாரத்துடன் செலுத்தவும், நம்முடைய வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கவும் தமது சித்தத்தைச் செயல்படுத்தவும், நமக்கு சகல நன்மைகளைப் பொழியவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஏதேன் தோட்டத்திலிருந்து பாவம் செய்த ஆதாமை வெளியேற்றினதாலும், பெருவெள்ளங்கொண்டு பாவிகளான மக்களை நோவாவின் காலத்தில் அழித்ததினாலும், பாவ மக்களை மீட்கத் தமது குமாரனையே தந்ததினாலும், நமது ஆன்மீக வாழ்க்கையில் நம்மைத் தாங்கி திடப்படுத்தத் தம் ஆவியானவைர அருளினதாலும் அவருடைய நீதியும் உண்மையும் விளங்குகின்றன. அவர் நமது அடைக்கலம். கன்மலை. இளைப்பாறுதல். அவர் உண்மையுள்ளவராதலால் நாமும் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக.
கர்த்தர் மேல் வைத்திடு
உன் பாரமனைத்தையும்
உண்மையுள்ள அவர் தாம்
உன் பளு நீக்கிக்காப்பார்.