முகப்பு தினதியானம் திட அஸ்திபாரம்

திட அஸ்திபாரம்

மே 30

“திட அஸ்திபாரம்.” ஏசாயா 28:16

மகிமை நிறைந்த இயேசு இரட்சகர் நிறைவேற்றின பூரண கிருபையானது பாவிகளின் நம்பிக்கைக்கு அஸ்திபாரம். மற்ற வேறு ஏதாவது ஒன்றின் பேரில் கட்டுவோமானால் நாம் நாசம் அடைந்துவிடுவோம். நமது நம்பிக்கைக்கு ஆதாரமாக கிறிஸ்துவோடு வேறெதையாவது சேர்ப்போமானால், அவரால் நமக்கு எவ்வித பயனும் இராது. கிறிஸ்து மட்டும்போதும். அவர் நமக்காக் கீழ்ப்படிந்து சம்பாதித்த புண்ணியம், அவர் பிராயச்சித்த பலி, காரிய சித்தியான அவர் மன்றாட்டு ஆகியவைகள்மேல் நித்தியத்திற்காக நாம் கட்ட வேண்டும். இவைகள் எல்லாம் ஒரே அஸ்திபாரம். இவைகளின்மேல் கட்டுவோமானால் பயம் இல்லை. இதுதான் உறுதியான அஸ்திபாரம்.

இரட்சகருடைய மகத்துவமும், அவருடைய குறைவற்ற குணாதிசயங்களும், அவர் செய்த புண்ணியமும், அவர் வாக்கின் உண்மையும் அஸ்திபாரத்தை இன்னும் பலமுள்ளதாக்குகிறது. கடந்த காலத்தில் அது உறுதியாய் நின்றது. இப்போதும் உறுதியாய் நிற்கிறது எப்போதும் அப்படியே நிற்கும். இயேசுவே அஸ்திபாரம். அவர்மேல் கட்டின எந்தப் பாவியும், எந்தக் குறையையும் கண்டதில்லை. எந்தப் புயலும் அதை அழிக்காது. எந்த வெள்ளமும் அதைக் கரைக்காது. பூமியதிர்ச்சியும் அதைச் சேதப்படுத்தாது. தேவனைப்போன்று அது உறுதியானது. நித்தியத்தைப்போல் நிலையுள்ளது. அதன்பேரில் மட்டும் கட்டுவோமாக. அப்படிக் கட்டி நம்முடைய அஸ்திபாரத்தைப் பார்த்து மகிழக்கடவோம். தீயமனிதரும் கேடு செய்கிறவர்களும் திரும்பத் திரும்ப தாக்கலாம். சாத்தான் அதை இடிக்க முயற்சிக்கலாம். ஆனால் தேவன்மேல் கட்டிய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கும். கர்த்தர் தம்முடையவர்களை அறிவார் என்பதற்கு இது முத்திரையாகிறது. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவையல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

எல்லாம் ஒழிந்துப் போனாலும்
இயேசு கன்மலை நிற்கும்
இதன்மேல் நிற்போம் எல்லோரும்
வாழ்வதென்றும் நிலைக்கும்.