யூன் 15
“அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.” ரோமர் 8:14
தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக்கு இரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற்றின கிரியை போதுமென்று பிடிக்கவும், அவரின் ஜீவனையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளவுமே அவர்களை நடத்துகிறார். சுருங்கக் கூறினால், தங்களை வெறுத்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, உலகைவிட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவே அவர்களை நடத்துகிறார்.
இப்படி தேவாவியினால் நடத்தப்படுகிறவர்கள்தான் தேவபுத்திரர். இவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளென்று அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் போதிக்கப்பட்டவர்கள். பிள்ளைகளாக நடத்தப்படுகிறவர்கள். தேவனுக்குச் சுதந்தரவாளிகள். கிறிஸ்துவின் கூட்டாளிகள். மேலான கனத்தில் பங்கு பெறவும், பரலோக ஆனந்தத்தை அனுபவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள்.
அன்பர்களே! நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களா? அவர் இன்று நம்மை கிறிஸ்துவினிடம் நடத்தினாரா? நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தாரா? கிறிஸ்து நமக்கு அருமையானவரா? நாம் தேவபுத்திரரானால் பயமில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.
குமாரனுடய ஆவி
அடையட்டும் பாவி
உம்மைவிட்டு விலகேன்
ஓருக்காலும் உம்மை விடேன்.