முகப்பு தினதியானம் உலகம் அவரை அறியவில்லை

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16

“உலகம் அவரை அறியவில்லை.” 1.யோவான் 3:1

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அவர் காட்டுகிற அன்பான குணமும், பட்சமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஏற்றுக்கொள்ள அவருக்கிருக்கிற மனதைப்பற்றியும், அவர்களை வழி நடத்த அவருக்கிருக்கும் தீர்மானத்தைப்பற்றியும் அவர்களுக்கு அடைக்கலம் தர அவருக்கிருக்கும் இரட்சிப்பைப்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. அவர் எவ்வளவு மகிமையுடையவரென்றும், அவரின் அதிகாரம் எப்படிப்பட்டதென்றும், அவரின் இரத்தத்தின் வல்லமையென்ன என்றும், அவர்கள் அறிவார்கள். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்றும் எத்தனை பாடுகளை அனுபவித்தாரென்றும், கெட்டுப் போனவர்களை எப்படி இரட்சிக்கிறாரென்றும் அவர்கள் அறியார்கள். கிறிஸ்துவை நேசியாதவனும் விசுவாசியாதவனும் அவரை அறியான்.

அவரை அறிகிற எவரும், அவரை அறிவர். அத்தகையோர் அவர் சொல்வதை விசுவாசித்து, மகத்துவம் உள்ள வழியில் நடந்து அவர் உண்மையுள்ளவரென்றும் மகிழ்வர். இயேசுவை நாம் அறிய வேண்டுமானால், அவர் நமக்கு வெளிப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுக்கு வெளிச்சம் தந்து, அவரின் தன்மையைக் காட்டி, அவர் வார்த்தையை நம் மனதில் தங்கும்படி செய்வார். இல்லையேல் நாம் அவரை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் தினந்தோறும் அவரின் மகிமையைக் கண்டு கர்த்தருடைய ஆவியினால் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலாக மாற்றப்படுவோமாக.

சுத்த ஆவியை எனக்குத்தந்து
தேவ சுதனை எனக்குக் காண்பியும்
தெளிவாய் என் கண்களுக்கு
அவர் மகிமையை வெளிப்படுத்தும்.