ஓகஸ்ட் 28
“மகா பிரதான ஆசாரியர்” எபி. 4:14
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஊழியஞ் செய்கிறவராயிருக்கிறார். அவர் நமக்கு ஆசாரியர். நமக்காகவே பிரதான ஆசாரியராக அபிஷேகம்பண்ணப்பட்டு அனுப்பப்பட்டார். நம்முடைய பாவங்களுக்காக அவர் பிராயச்சித்தம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். அந்தப் பிராயச்சித்தமே தேவ மகிமையால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது மதிப்புக்கு அடங்காதது. என்றும் பிரசித்தி பெறத்தக்கது. அது நம்முடைய குற்றங்களையும் பாவங்களையும் நிராகரித்துவிட்டது. இப்போதும் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இதற்காகவே அவர் பிழைத்தும் இருக்கிறார். எப்போதும் அதைச் செய்துக் கொண்டு வருகிறார்.
தம்முடைய கிருபையினால் பலவித ஊழியங்களையும், நம் ஜெபங்களையும், பெலவீனங்களையும், சுகந்த வாசனையாக்குகிறார். இந்தப் பரிந்து பேசுதல் நமதுமேல் வரும் துன்பங்களை விலக்கி நமக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் சம்பாதித்து தம்முடைய தயவுகளை நம்மேல் பொழிகிறது. இப்போதும் நமக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். இரத்தத்தை தெளித்து தூபத்தைச் செலுத்துகிறார். அவர் ஆசாரியர் மட்டுமல்ல. பிரதான மகா பிரதான ஆசாரியர். அவர் மகத்துவத்திலும் வல்லமையிலும் மகிமையிலும், இலட்சணங்களிலும் அவர் ஊழியங்களின் பலனிலும் அவருக்கு மேலானவர் ஒருவரும் இல்லை. இவரே நம்முடைய மகா பிரதான ஆசாரியர். இவர் தேவக் குமாரனாகவும் நமக்கு இருக்கிறார். நமக்காக அவர் தேவ சமுகத்தில் நிற்கிறார். இன்று இரவு அவர் நமக்காகத் தம்முடைய இரத்தத்தைச் சமர்பிக்கிறார்.
அவர் பிதாவின் சமுகத்தில்
நமக்காகப் பரிந்து பேசுவார்
அவரிடம் ஒப்புவித்ததெல்லாம்
நலமாய் முடிப்பார்.