யூலை 05
“விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்.” நியா. 8:4
கிதியோனுடைய போர்ச் சேவர்கள் அதிகம் வருத்தப்பட்டார்கள், விடாய்த்துப் போனார்கள். ஆகிலும் அவர்கள் கர்த்தர் தெரிந்துகொண்ட சேனை. தங்கள் தலைவனின்பின் அவர்கள் உறுதியாய் சென்றார்கள். பிரயாசத்தினாலும், தங்கள் வெற்றியினாலும், உணவில்லாமையினாலும், இளைத்துப் போனார்கள்.
முற்பிதாக்களின் காலத்தில் அற்புதங்கள் செய்யப்பட்ட யோர்தான் நதிக்கு சமீபத்தில், வெற்றி முற்றுப்பெற்ற கடைசி நேரத்தில்தான் விடாய்த்துப் போனார்கள்.
கர்த்தருடைய ஜனங்களைப்பற்றியும் இப்படியே சொல்லலாம். இவர்கள் கர்த்தருக்கு அருமையானவர்களாய் இருந்தும், சிலுவையின் போர்ச்சேவகராய் இருந்தும் சுமைகளாலும், துன்பங்களாலும், யுத்தங்களாலும், ஞானாகாரக் குறைவினாலும், அடிக்கடி இளைத்து, சோர்ந்து மனமடிவாகிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின்தொடருவதை விடுகிறதும் இல்லை. மாம்ச சிந்தைக்கு இடங்கொடுக்கிறதுமில்லை. தேவன் இதைச் செய்வாரோ, மாட்டாரோ என்று யோசிக்கிறதுமில்லை. அவர் கைவிட்டாரோ இல்லையோ என்று வீணாய் கங்குகிறதுமில்லை. இவர்கள் தேவன் கொடுத்த உத்தரவு பிரகாரம் தாங்கள் மேற்கொண்ட சத்துருக்களைப் பின் தொடர்ந்தார்கள். வாக்குத்தத்தங்கள் இவர்களை உற்சாகப்படுத்தின. ஆகவே முழு நிச்சயத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தொடர்ந்து போகிறார்கள்.
நீ சோர்ந்து போகிறாயா? அது உன் ஜெபத்தில், பிரயாசத்தில் பிரதிபலிக்கிறதா? இன்னும் தொடர்ந்து போ. பெலவீனமாய் இருந்தாலும் தொடர்ந்து போ. தேவன் உன்னோடு இருப்பதால் தொடர்ந்து போ.
சத்துருவை ஜெயிக்கும் மட்டும்
ஜெபித்து நின்று போராடு
ஜெயம் கடைசியில் வரும்
ஜீவ கிரீடமும் கிடைக்கும்.