முகப்பு தினதியானம் நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்

நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்

யூலை 19

“நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்” சங். 41:11

எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில் செத்துக்கிடப்போம். அல்லது குற்றமுள்ள மனட்சாட்சியோடே வாழுவோம். அல்லது அவநம்பிக்கைக்கு இடங்கொடுத்து கெட்டழிவோம். நம்முடைய சத்துருவும் நமதுமேல் ஜெயம் அடைவான். சாத்தான் நம்மைவிட அதிக ஞானமும், வல்லமையும் திறமையும் அனுபவமும் உள்ளவன். நம்முடைய பெலவீனத்திலும், பயத்திலும் அவன் நம்மை மேற்கொள்வான். நம்முடைய உள்ளான பலம் அவனுக்குத் தெரிந்திருப்பதனாலும் நம்மை அவன் வசப்படுத்துவான். நம்மைப் பாவத்திற்கு இழுத்து விழுவதற்கு முயற்சிகள் செய்து, நம்மை அவநம்பிக்கைக்கொள்ள செய்வான். ஆயினும் அவன் மேற்கொள்வதில்லை.

கர்த்தர் நம்மேல் பிரியமாய் இல்லாதிருந்தால் அவன் நிச்சயமாக நம்மை மேற்கொள்வான். இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். பரிசுத்தாவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நம்முடைய பரம பிதாவும் தம்முடைய உண்மையான வாக்கை நிறைவேற்றி சாத்தானை தடுத்து மட்டுப்படுத்தியுள்ளார். போராட்ட வேளையில் அவர் தமது கேடகத்தால் நம்மை மறைத்து யுத்தத்தின் அகோரத்தில் நம்மைப் பாதுகாக்கிறார். நம்முடைய வேலைக்குத் தேவையான பெலனை அளித்து, அவர் கிருபை நமக்குப் போதும் என்று காட்டுகிறார். அநேகர் விழுந்தாலும் நாம் நிற்கிறோம். அநேகர் பின்வாங்கிப்போனாலும் நாம் உறுதியாய் இருக்கிறோம். இந்த இரவு அவருடைய இரக்கத்திற்கு ஞாபகக் குறிகளாய் இருக்கிறோம். நாம் தேவனுக்குப் பிரியமான பிள்ளையென்று நாம் ஒவ்வொருவரும் சொல்லலாம்.

கர்த்தர் விடுவிப்பார் என்று
அவரை நம்பி இருப்பேன்
அப்போ அவர் பக்தரோடு
என்றும் களித்து நிற்பேன்.