மார்ச் 18
“பயப்படாமலும் கலங்காமலும் இரு.” உபா. 1:21
கர்த்தர் நம்மை சோதித்தாலும் நமக்குத் தைரியம் கொடுக்கிறார். அவர் தமது வசனத்தில் முன்னூற்று அறுபத்தாறு முறைக்குமேல் பயப்படாதே என்கிறார். ஆனால் நாமோ அடிக்கடி பயப்படுகிறோம். இதை ஆண்டவர் அறிந்துதான் நம்மைச் சந்தோஷப்படுத்தவும், நமக்கு உற்சாகம் அளிக்கவும் இத்தனை முறை சொல்லியிருக்கிறார். தேவன் நல்ல தேசத்தை நமக்கு முன்பாக வைத்து அதை நமக்கத் தருவேன் என்று வாக்களித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் போங்கள் என்று கற்பித்தபடியால் நாம் அதைரியப்படக்கூடாது. நமது சத்துருக்கள் பலத்திருக்கலாம். ஆனால் நமது சர்வ வல்லவரான தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார். நமது சத்துருக்கள் தந்திரக்காரராய் இருக்கலாம். ஞானமுள்ள ஒரே தேவன் நமது பட்சத்தில் இருக்கிறார். தேவக்கோபம் நம்மீது இருப்பதுப்போல தோன்றலாம். நமது ஜெபங்களுக்கு பதில் அளிக்காமல், காரியங்கள் மோசப்பட்டு போவதாய்க் காணலாம். ஆனால் நமது நற்குணங்களை அதிகப்படுத்த, நமது உத்தமத்தைச் சோதிக்க, கருத்தான ஜெபத்தை ஏறெடுக்க இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிக்கிறார் என்று அறிய வேண்டும்.
அன்பர்களே, ஆகவே நம்பிக்கையில் உறுதிப்பட்டு விசுவாசத்தில் விடாப்பிடியாய் இருக்க வேண்டும். கர்த்தர் நமக்காக வெளிப்படுவார். நமது அனுபவத்தால் அவர் வசனம் உண்மையுள்ளது என்று கண்டறிவோம். இப்போது எந்தப் பதிலும் அவர் சொல்லாவிட்டாலும் நமது இருதயம் விரும்புகிறபடி சீக்கிரம் செய்வார். ஆதலால் பயப்பட அவசியமில்லை. பயம், விசுவாசத்தைப் பெலவீனப்படுத்தி, தேவனைக் கனவீனப்படுத்தி, நமது சத்துருக்களை சந்தோஷப்படுத்தும். உங்களோடு தேவன் இருக்கிறார். அவர் உனக்கானவர்.
உமது சமுகம் தேடி
உம்மில் மகிழ்ந்திருப்போம்
உமது வாக்கை நம்பி
பயத்தை அகற்றுவோம்
விக்கினங்கள் பெருகினும்
உம்மால் வெற்றிபெறுவோம்.