செப்டம்பர் 25
தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்” யாக். 4:7
சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மகிழ்ச்சியும், சமாதானமும் இருக்கும். கீழ்ப்படிதலில்லாதபோது பரிசுத்தமும் இருக்காது. கீழ்ப்படியாமைக்கு முக்கிய காரணம் அகந்தையும், மேட்டிமையுமே. தேவனுக்குக் கீழ்ப்படிய நான் மனமற்றிருப்பது, அவருடைய அதிகாரத்திற்கு எதிர்த்து, அவருடைய ஞானத்தையும், மகத்துவத்தையும் மறுப்பதாகும். அவருடைய அன்பை மறுத்து அவருடைய வார்த்தையை அசட்டை செய்வதாகும். அவரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு அடங்கி இருக்கும்பொழுது நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம். அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது அவர் தரும் அனைத்தையும் நாம் நன்றியறிதலோடு பெற்றுக்கொள்வோம்.
தேவ அதிகாரம் என்று முத்திரை பெற்றுவருகிற எதற்கும் நாம் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில் நமக்கு இரட்சிப்பில்லை. இந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பாதத்தில் பணிந்து தொழுது கொள்ள வேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில், அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தேவ கிருபையால் இரட்சிக்கப்படுதலுக்கும், அவருடைய வார்த்தையில் வளருவதற்கும் கீழ்படிதலே காரணம். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கட்டும் என்று எல்லாக் காரியங்களையும் அவருக்கு ஒப்படைத்து விடுவதற்கு நம்மில் கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். ஆத்துமாவே, நீ கீழ்ப்படிந்தால் பெலவானாயிருப்பாய். பரிசுத்தவானாய் இருப்பாய். உன் வாழ்க்கையிலும், மரண நேரத்திலும் தைரியசாலியாயிருப்பாய்.
தயாளம், இரக்கம் நிறைந்தவர் கர்த்தர்
தம் மக்களை ஒருபோதும் மறந்திடார்
அவருக்கே நான் என்றும் கீழ்ப்படிந்து
அவர் நாமம் போற்றித் துதிப்பேன்.