டிசம்பர் 21
„உனக்கு விசுவாசம் இருந்தால்“ ரோமர் 14:22
விசுவாசம் தேவன் கொடுக்கும் வரம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் விசுவாசம் அவர் கொடுத்ததே. நேற்று இல்லாத விசுவாசம் இன்று இருக்கிறது. ஏன் என்றால், சுபாவப்படி எவருக்குமே விசுவாசம் இல்லைத்தான். இப்போது உனக்கு விசுவாசம் இருக்கிறதென்றால், அது தேவன் கொடுத்தது என்பதை மறக்காதே. உன்னில் அவிசுவாசம் இருக்குமானால், அதனோடு நீ போர் செய்து, ஜெபித்து, விசுவாசத்தைப் பெற்றுக்கொள். „கிறிஸ்துவின்மீது உனக்கு விசுவாசம் உண்டா? அவர் சொல்வது, செய்தனைத்தும் சரியானவைகளே என்று விசுவாசிக்கிறாயா? அவருடைய வார்த்தைகள் உண்மை. அவர் செய்த தியாகம் இவைகளின்மூலமாக, தமது கிருபையினால் உனக்கு நித்தியமான இரட்சிப்பைத் தந்தருளினார் என்று மனப்பூர்வமாக விசுவாசிக்கிறாயா? அவருடைய வேதத்தை முழுவதும் நம்புகிறாயா? அவர் செய்த அற்புதங்களை ஐயங்கொள்ளாமல் விசுவாசிக்கிறாயா? என்பதையெல்லாம் சோதனை செய்.
தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நீ, உன் ஆத்துமா அவர் கைகளில் ஒப்புக்கொடுக்கப் போதுமான விசுவாசம் உன்னில் உண்டா? அவருடைய ஊழியங்களை உனக்குச் சொந்தமாக்கி, நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று சொல்லும் தைரியம் உனக்கு உண்டா? உன்னுடைய பிதாவாகிய தேவனைமட்டும் விசுவாசிக்கிறாயா? உன்னுடைய தேவைகளைச் சந்தித்து, உன்னைப் போஷித்து, உன்னை வழிநடத்தும் கர்த்தர் உன்னை மகிமையில் ஏற்றுக்கொள்ளுவார் என்கிற விசுவாசம் உனக்கு உண்டா? உன் எதிர்காலத்தை அவருடைய கரத்தில் வைத்து நம்பிக்கையோடு காத்திருக்கிறாயா? அப்படியானால், மகிமையெல்லாம் தேவனுக்கே. இல்லையானால், தேவனை விசுவாசி, அவரையே நம்பு. தேவவார்த்தையினால் உன் விசுவாசத்தைப் பெலப்படுத்திக்கொள். கவனமாயிருந்து அவிசுவாசத்திற்கு இடம் கொடாதிரு.
விசுவாச இருதயத்தை
வன்மையுள்ளதாய்க் காத்திடும்
உமது சுவிசேஷத்தைப் பற்றியே
உறுதியாய் நிற்க உதவி செய்யும்.