யூலை 18
“அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்” யோவான் 17:10
பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி, சகல பாவங்களிலிருந்தும் நாம் பூரணராய் நீதிமானாக்கப்படுவதனால் மகிமைப்படும். அவருடைய வல்லமை நாம் உலகத்தினின்று பிரிந்து நித்திய ஜீவனுக்கென்று காக்கப்படுவதனால் மகிமைப்படும். நாம் உயிர்பிக்கப்பட்டு அனுபவிக்கும் எண்ணில்லா நன்மைகளால் அவர் இரக்கமும், நாம் விடுவிக்கப்பட்டு சந்தோஷப்படுவதில் அவர் வார்த்தையும், நாம் அவரோடு ஐக்கியப்பட்டு ஒன்றாவதில் அவருடைய சிந்தையும் மகிமைப்படும்.
நம்முடைய ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கிடைக்கும் உத்தரவில் அவருடைய உண்மையும், நாம் தைரியமாய் நம்பிக்கையோடு கிருபாசனத்தண்டை சேருவதில் அவருடைய அன்பும், துன்பத்தில் நமக்கு வேண்டியதைத் தந்து ஆதரிப்பதில் அவருடைய தயையும் மகிமைப்படும். நம்முடைய துக்கங்களிலும் வருத்தங்களிலும் அவருடைய உருக்கமும், நம்முடைய பெலவீனங்களிலும் முரட்டாட்டத்திலும் நம்மை தாங்குகிறதில் மரணத்திலும் நம்முடைய நித்திய இரட்சிப்பிலும் அவருடைய கிருபையும் மகிமைப்படுகிறது. நாம் எதிர்பார்க்கிறதெல்லாம் அவரிடத்திலிருந்துதான் வரவேண்டும். அவருடைய சபை அவருடைய மகிமையானதால் அவர் அதை மகிமையுள்ளதாக்குவார். அதை அவர் மாசு திரை ஒன்றுமில்லாமல் மகிமையுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்துவார். இயேசு என்னில் மகிமைப்படுகிறார் என்பது எத்தனை அருமையான சத்தியம்.
என்னில் உம் மகிமை
தங்கிட அருளும்
உமக்காகவே பிழைப்பேன்
உமக்கென்றே சாவேன்.