முகப்பு தினதியானம் ஜனவரி குறிப்பினால் அறிந்தேன்

குறிப்பினால் அறிந்தேன்

ஜனவரி 26

“குறிப்பினால் அறிந்தேன்.” ஆதி. 30: 27

குறிப்பினால் அறிந்தேன் அல்லது அனுபவத்தால் அறிந்தேன். இப்படி சொன்னவன் லாபான். யாக்கோபு தனக்கு ஊழியஞ் செய்ததினால் தான் அடைந்த பிரயோஜனத்தைப்பற்றி இப்படி சொன்னான். தேவ போதனையால் உண்டாகும் நன்மையைக் குறித்தும் ஒரு கிறிஸ்தவன் இப்படிச் சொல்லலாம். அனுபவம் என்பது பரீட்சையினால் உண்டாகும் அறிவு. அனுபவத்தால்தான் உண்மை மார்க்கத்தின் உண்மையும், மேன்மையும் அடைகிறோம். அறிகிறோம். சாத்தானுடைய தந்திரங்களையும், விசுவாசத்தின் ரகசியங்களையும் அறிகிறோம். துன்பத்தால் உண்டாகும் பிரயோஜனத்தையும் இவ்வுலகத்தின் வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உடன்படிக்கையில் நமக்கு தேவனுடைய அன்பையும் உண்மையையும் கற்றறிகிறோம்.

அனுபவத்தால் வருகிற அறிவுக்கு சமமானது ஒன்றுமில்லை. கேள்வியால் உண்டாகும் அறிவுக்கு இது மேலானது. உறுதியைப் பார்த்தாலும் பிரயோஜனத்தைப் பார்த்தாலும் மனதை ஸ்திரப்படுத்துகிற நிச்சயத்தைப் பார்த்தாலும் இது எந்த அறிவுக்கும் மேலானது. வாலிபர்கள் அடக்கமுடியவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் அறிந்துக் கொண்டது கொஞ்சம். அனுபவமடைந்தவர்கள் தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். இதுபோல் பிரயோஜனமுடையது ஒன்றுமில்லை. அனுபவத்தால் நாம் சொல்லுகிறதும் நமது நடக்கையையும் ஒத்திருக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

நேசித்து உமது சொல்படி
செய்திட எனக்கு கற்பியும்
உமது அனுபவத்தின்படி
என்னை உம்முடையவனாக்கும்.