முகப்பு தினதியானம் ஒகஸ்ட் தேவனையே நோக்கி அமர்ந்திரு

தேவனையே நோக்கி அமர்ந்திரு

ஓகஸ்ட் 06

“தேவனையே நோக்கி அமர்ந்திரு” சங். 62:5

தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது. அவரைநோக்கி காத்திருக்கச் செய்கிறது. ஆவிக்குரிய எந்த செய்கைக்கும் ஏது செய்கிறது. அவரை நோக்கி அமர்ந்திருப்பதென்பது நமது விருப்பத்திற்கு அடையாளம். அவரிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் அவரை நோக்கி பார்க்க மாட்டோம். அவர்முன் காத்திருக்கவும் மாட்டோம். இதில் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கிறது. இந்தக் கடமையை அசட்டை செய்வது பாவம்.

இப்படி தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதில் அடங்கியிருப்பது என்ன? அவருடைய வசனத்தின்மேல் விசுவாசம். அருடைய ஆசனத்தண்டையில் செய்யும் விண்ணப்பம். அவரின் நற்கிரியைகளை செய்தல். ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்று காத்திருத்தல். நம்முடைய விஷயத்தில் தேவன் உதவி செய்வாரென்று எதிர்பார்த்தல். எல்லா இடத்திலும் தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து அவருக்குப் பயப்படுதல். அவரே நன்மைகளுக்கு காரணமும் ஊற்றுமானவர் என்று அவருக்குப் பயப்படுதல் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியிருக்கிறது. கர்த்தரிடம் அமர்ந்திருந்தால் நாம் சுகபத்திரராகவும், பரிசுத்தமாகவும், ஜசுவரியர்களாகவும், திருப்தியுள்ளவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் இருப்போம். நீ செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்காகக் காத்திரு. அதிலும் துன்பப்படும்போதும், கலங்கும்போதும், அவருக்குக் காத்திரு. அதிலும் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம். கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கமடையார் என்று அவர் சொல்லுகிறார்.

உமது சமுகம் தரிசிக்க
ஆவலோடு காத்திருப்பேன்
கர்த்தரைத் தேடிய
இஸ்ரவேலர் வெட்கப்பட்டதில்லை.