மார்ச் 05
“இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.” ஓசியா 12:16
உன் தேவனை நம்பிக்கொண்டிரு அல்லது உன் தேவனுக்காகக் காத்துக்கொண்டிரு. தேவனிடம் காத்திருப்பதே நம்மை பரம சிந்தைக்கு வழி நடத்துகிறது. அவருடைய சிங்காசனத்துக்கு முன் நிறுத்தி அவர் வார்த்தையில் விசுவாசம் தந்து, அவர் இரத்தத்தை நம்ப வைத்து அவரின் சித்தத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது. அவர் பாதத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் அவருக்குப் பிரியமானதை செய்ய நமது மனம் நினைக்கும். காத்திருக்கும் ஆத்துமாதான் சகலத்திலும் தேவனைக் காண்கிறது. எவ்விடத்திலும் தேவன் இருக்கிறார் என்றே உணருகிறது. எந்தக் காரியத்தையும் தேவன் நடத்துகிறார் என்று ஒத்துக்கொள்கிறது. உன் தேவனிடத்தில் எப்போதும் காத்திரு. அப்போதூன் எக்காலத்திலும் மோசத்திற்குத் தப்பி சுகித்திருப்பாய். எந்தச் சோதனையிலும் வெற்றிப் பெறுவாய். கர்த்தர் தம்முடைய நியமங்களின்மூலம் உன்னை மேன்மைப் படுத்துகிறதைக் காண்பாய்.
ஜாக்கிரதையுள்ள ஊழியக்காரன் தன் பட்சமுள்ள எஜமானிடத்திலும், உத்தம வேலைக்கரி தன் எஜமாட்டியிடத்திலும் பட்சமுள்ள பிள்ளை தன் பிரிய தகப்பனிடத்திலும் காத்திருப்பது போல காத்திரு. நீ காத்திருப்பது அவருக்குப் பிரியமானபடியால் அவரிடத்தில் காத்திரு. காத்திரு என்று உன்னிடம் அவர் சொன்னதால் காத்திரு. அவர் இரக்கம் காண்பிக்கும் நேரத்திற்காக காத்திரு. அவருக்காக காத்திருப்பவர்கள் வெட்கப்படமாட்டார்கள். கர்த்தரிடம் காத்திரு. திடமனதாயிரு. அதுவே பெலன். இனி ஆத்துமாவே, இன்று தேவனிடத்தில் காத்திருந்தாயா? இந்த இராத்திரியிலே அவரோடு அமர்ந்து காத்திருக்கிற சிந்தை உன்னிடத்தில் உண்டா? கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் என்று தைரியமாய் உன்னால் சொல்ல முடியுமா? இல்லையென்றால் இனிமேலாவது காத்திருக்க தீர்மானி.
விசுவாசித்து காத்திரு
திடமாய் நிலைத்திரு
அவர் வார்த்தை உண்மையே
அவர் பெலன் அளிப்பாரே.