ஓகஸ்ட் 05
“மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” எபேசி. 6:6
தேவனுடைய சித்தம் என்ன என்பதை நாம் அறியவேண்டும். ஒவ்வொரு பாவியும் தம்மை விசுவாசித்து, நேசித்து தமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே தேவ சித்தம். ஒவ்வொரு தேவ பிள்ளையும் தேவனுடைய அதிகாரத்தை மதித்து, தம் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தம் கொள்கிறார். தேவன் தம் சித்தத்தை வெளிப்படுத்துவதைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். நமது வாழ்க்கைக்கு அதுவே சட்டம். நமக்கு இது கடமையாகவும் தேவனுடைய சித்தம் செய்யும் பொறுப்பாகவும் இருக்கிறது. மனிதர் நம்மை விரோதித்தாலும், நமது பிரியத்துக்கு அது விரோதமாய் கண்டாலும், நாம் பிதாவினுடைய சித்தம் செய்ய வேண்டும்.
எஜமானுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அரசருடைய சட்டத்தைக் கைக்கொள்ள வேண்டும். இரட்சகருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் சித்தத்தை மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். பாவம் இருக்கும் இருதயத்திலிருந்து எல்லா தீமையும் வருகிறதுப்போல், கிருபையால் புதுப்பிக்கப்பட்ட இருதயத்திலிருந்து நன்மையான காரியங்கள் வெளிப்படுகிறது. இந்த நன்மையான கிரியைகள் தேவனுடைய சித்தம் செய்பவையாகவும் இருக்கவேண்டும். முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். உற்சாகமாய் தேவனுக்குரியவைகளை நிறைவேற்ற வேண்டும். பிரியமானவரே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்ய உங்களுக்கு மனம் உண்டா? உங்களுக்கு இருக்கிற அறிவுக்குத்தக்கதாக செய்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படிதல் மனப்பூர்வமானதா?
கிறிஸ்துவே என் மாதிரி
அவரையே நான் பிடிப்பேன்
அவர் அடி பின் செல்லுவேன்
அவர் சாயல் அணிவேன்.