முகப்பு தினதியானம் அக்டோபர் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்

எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்

அக்டோபர் 08

“எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்” ஓசியா 7:5

இந்த வசனத்தை வேறுவிதமாய்க் கூறினால், எனக்கு விரோதமாய்ப் பொய்யைப் பேசுகிறார்கள் எனலாம். யார் அவ்வாறு பேசுவது? கர்த்தரால் மீட்கப்பட்ட ஜனங்களே! இப்பாவத்தைச் செய்யாதவர்கள் யார் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளுவோம். மாகொடிய பாவியையும் தேவன் அன்பாக ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கும்பொழுது யார் என்னை ஏற்றுக்கொண்டது, நான் ஓர் அநாதை, என்று நீ பொய் சொன்னாய். அவருடைய கிருபையாலும், இரக்கத்தினாலும் எவரும் கைவிடப்படுவதில்லை என்று இருக்கும்பொழுது நீ, கடவுள் என்னைக் கைவிட்டார். எனக்கு ஆதரவு தர எவருமில்லை என்று பொய்யாகக் கூறினாய். உன் துன்பம், துயரம், வறுமையிலும் உன் ஜெபங்களைக் கேட்டார். ஆண்டவர், அப்பொழுதும்கூட நீ யார் என் குறைகளைக் கேட்டது? எவன் என் பிரச்சினைகளைத் தீர்ப்பார்? என்று அங்கலாய்க்கிறாயல்லவா? இவ்வாறாக ஒவ்வொரு நாளும் நீ தேவனுக்கு முன்பாகக் கூறின பொய்கள் எத்தனை எத்தனையோ.

நண்பனே, எச்சரிக்கையாயிரு, உன் அவிசுவாசம் தேவனைப் பொய்யராக்க அனுமதியாதே. உன் சந்தேகங்கள் அவருடைய உண்மையைக் குறைகூறுகின்றன. அவர் பொய்யுரையார் என்றும் உண்மையே உரைப்பவர். அப்படியானால், நீ ஏன், அவரை விசுவாசிப்பதில்லை? ஏன், உன் அவிசுவாசத்தினால் அவரைப் பொய்யராக்கக் காணப்படச் செய்தாய்? தேவன் தமது குமாரனைக் குறித்துச் சொன்ன சாட்சியை நீ நம்பாமல் போனதினால்தான் இவ்வாறிருக்கிறாய். அவருக்கு விரோதமாய் எப்பாவமும் செய்ய எண்ணாதே. அவருடைய கோபத்திற்கு ஆளாகாதபடிக்கு கவனமாயிரு. அவருடைய முன்னிலையில் எதையும் தெய்வ பயத்தோடும், தாழ்மையோடும் ஏற்றுக்கொள்.

நான் ஒரு பொய்யனென்று
ஆண்டவா, அறிக்கையிடுகிறேன்.
கிறிஸ்துவின்மூலம் எனை மன்னித்துக்
கிருபையருளும் என் மீட்பரே!