அக்டோபர் 07
“அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” யோபு 23:10
யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான். குறைவுள்ளவனானாலும் அவன் உண்மையுள்ளவன். தேவன் தன் இருதயத்தையும், நடத்தையையும் விருப்பத்தையும் அறிந்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். தன்னுடைய சோதனையின்பின்தான் புதுபிக்கப்படுவான் என்ற நம்பிக்கையும் அவனுக்கு அதிகமாக இருந்தது.
தேவன் நம்மைச் சோதிக்கும் நோக்கமே இதுதான். நம்முடைய எஜமானுக்கு நாம் தகுதியுடையவர்களாகும்படியே அவர் நமக்கு அவைகளை அனுமதிக்கிறார். நித்திய மகிமைக்கு நம்மை ஏற்றவர்களாக்கவே நம்மைச் சோதித்துத் தூய்மை ஆக்குகிறார். நமது பாவங்களும் தவறுதல்களும் இந்தச் சோதனைகளால் நம்மை விட்டு நீங்கி விடும். நமக்கு வேறெதுவும் நடக்காது. நமது பேரின்பத்தின் பலன்கள் அதிகரித்திடும். நித்திய மகிழ்ச்சிக்கு அவை வழிவகுக்கும். நமது தேவன் மாறுகிறவரல்ல. அதுதான் நமக்கு மகிழ்ச்சியும் மனஉறுதியும் தரும். நான் கர்த்தர், நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை என்கிறார். கர்த்தர், தேவன் நம்மைப் புதுப்பிக்கச் சோதனையிடும்பொழுது புடமிடும் குகையண்டை அமர்ந்து பணிமுடிந்ததும் அக்கினியை அவித்துவிடுகிறார். சோதனைக்குள் இருக்கும் கிறிஸ்தவனே, கர்த்தர் உன் சோதனையை மாற்றுவார். உன்னைப் புதிப்பிப்பார். அவர் அன்பினால் அவ்வாறு செய்கிறார். இதை நம்பியிரு. அவிசுவாசங்கொள்ளாதே. உன் விசுவாசத்தை வளர்த்துத் தைரியங்கொள். யோபைப்போல் நான் போகும்வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று சொல்.
துன்பம் எனும் சூளையிலும்
உம் வாக்கையே நம்புவேன்
நீர் என்னைத் தாங்குகையில்
பொன்னைப்போல் மிளிருவேன்.