செப்டம்பர் 29
“ஆரோன் பேசாதிருந்தான்” லேவி. 10:3
ஆரோன் மிகப்பெரிய துன்பத்தில் இருந்தான். அவனுக்கு ஏற்பட்ட சோதனை மிகப்பெரியதே. அந்தச் சோதனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்களே. அவனது இரண்டு குமாரர்களும் மடிந்துவிட்டனர். தங்கள் துணிகரமான பாவத்திற்காகத் திடீர் மரணம் அடைந்தனர். தேவன் அவர்களைக் கொன்று போட்டார். தேவனுடைய வைராக்கியம் கோபம் எப்படிப்பட்டது என்று காட்ட மக்கள் காணும்பொழுதே மரித்துப்போனார்கள். அவர்களுக்கு மனந்திரும்ப அவகாசம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் நித்திய வாழ்வைக் குறித்து அறியாதிருந்தார்கள். இதனால் தாம் மகிமைப்படுவதாகக் கர்த்தர் கூறினார். ஆரோன் பேசாதிருந்தான். தேவன் செய்தது நீதியோ, இல்லையோ, சரியோ, தவறோ, என்று முறுமுறுத்து அவன் கேள்வி கேட்கவில்லை. அத்தகைய பண்பு நமக்கு வேண்டும். இவை போன்ற காரியங்கள் தேவ சித்தத்துடன்தான் நடக்கிறன. இது அவரை யாவற்றிற்கும் மேலாக நேசிப்பதாலும் தண்டனைக்குத் தான் பாத்திரன்தான் என்று எண்ணுவதாலும் ஏற்படுகிறது.
நண்பரே, இந்தக் காரியம் நம்மோடு பேசி, நமக்கு நேரிடும் பெருந்துன்பங்களில் நம்மை ஆரோனைப் போலிருக்கத் தூண்டுகிறது. நமது முறைப்பாடுகள் எல்லாவற்றிலும், தேவ அன்பு இரக்கம் பற்றி நமக்கு உண்டாகும் ஐயங்களையும் கடிந்து கொள்கிறது. பக்தர்களையும் துன்பங்கள் விடவில்லை என்பதை நமக்கு எடுத்துக்காட்டி நம்மை ஆறுதல்படுத்துகிறது. இவ்வாறு நாம் எச்சரிக்கப்படுவதால் எவ்விதத் துணிகரத்திற்கும், அசட்டைக்கும் நாம் இடங்கொடுக்கக் கூடாது. நமது தேவன் வைராக்கியமுள்ளவர். அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்கிறார். கர்த்தர் நீதியுள்ளவர். அவர் வழிகள் நீதியும் செம்மையுமானவை.
யாது நடந்திடினும் யான்
உமக்கடங்கி யிருப்பேன்
உம் சித்தம் என் பாக்கியம்
எனக் கூறி மகிழ்ந்திடுவேன்.