முகப்பு தினதியானம் அதிபதியாகவும் இரட்சகராகவும்

அதிபதியாகவும் இரட்சகராகவும்

நவம்பர் 01

“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31

இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.

அவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.

எந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.

இரட்சகரான இயேசுவே
உயிரோடெழுப்பி பரத்தில்
வீற்றிருப்போரே, பாவியாம்
என்னையும் இரட்சித்தருளும்.