முகப்பு தினதியானம் என் தேவன் என் பெலனாய் இருப்பார்

என் தேவன் என் பெலனாய் இருப்பார்

நவம்பர் 04

“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5

தேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.

அவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.

நான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.

எனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.

என் தேகம் மாண்டு போனாலும்
என் தேவன் என் பெலனாவார்
இதனால் நான் பெலனடைவேன்
என் விசுவாசம் வளர்ப்பேன்.