முகப்பு துண்டு பிரதிகள் பணத்தால் சாதிக்க முடியாது

பணத்தால் சாதிக்க முடியாது

பணத்தைக் கொடுத்து…..

மெத்தை படுக்கைகள் வாங்கலாம்,
நித்திரையைப் பெற முடியாது.
மருந்துகள் வாங்கி சாப்பிடலாம்,
சுகத்தைப் பெற இயலாது.
புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம்,
அறிவை அடைய முடியாது.
ஆபரணங்கள் வாங்கி அணியலாம்,
அழகைப் பெற முடியாது.
வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,
ஆயினும் வாழ்க்கை அமையாது.
வீடுகளைக் கட்டலாம்,
குடும்பத்தைக் கட்ட முடியாது.
வசதிகள் பலதும் பெறலாம்,
மெய்யின்பத்தை நுகர முடியாது.
உறவுகள் பெற்றிருக்கலாம்,
அன்பைப் பெற முடியாது.
தான தருமங்கள் செய்யலாம்,கடவுளைக் காண இயலாது.
புண்ணிய யாத்திரை செல்லலாம்,
ஆன்ம இரட்சிப்பை அடைய முடியாது.

பணம் வாங்கிக் கொடுக்க முடியாதவைகளை எல்லாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு இலவசமாகவே அருளுகிறார். மெய்தேவனிடம் சிபாரிசுகள் பலிக்காது; பணமும் செல்லாது. “நமக்கு பதில் கிடைக்கும்படிக்கு முந்தி தேவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” என்று தூய வேதம் கேட்கிறது. பணம் கொடுத்து நாம் தேவனை திருப்தி செய்ய முடியாது. நமக்கு ஜீவன் கொடுத்து, நாம் வாழ்வதற்குத் தேவையான காற்றையும், நீரையும் இலவசமாக கொடுக்கிற இயேசு கிறிஸ்து நமக்கு பாவமன்னிப்பையும், ஆன்ம இரட்சிப்பை யும் பணமுமின்றி விலையுமின்றி வழங்குகிறார்.

“வருத்தப்பட்டுப்பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக் கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத். 11:28-30) தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினால் நமக்கு உண்டுபண்ணி, உன்னதத்திற்கு ஏறிச் சென்றிருக்கிறார்.

ஆன்ம இரட் சிப்பையும் தேவ சமாதானத்தையும் அவரிடம் வரும் எவருக்கும் இலவசமாக அருளுகிறார்.

“சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்.

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் பாவங்களை அறிக்கை செய்து, அவரையே உங்கள் ஆண்டவரும், இரட்சகருமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றே அவரிடம் வருவீர்களா?