முகப்பு தினதியானம் இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்

இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்

நவம்பர் 16

“இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்” எபி. 13:8

தேவனுக்கிருக்கும் முக்கியமான தன்மைகளின் ஒன்று அவர் மாறாதவர் என்பது. இப்பண்பு அவருக்கு மட்டுமே பொருந்தும். இதைக் கொண்டே அவர் தம் மக்களை ஆறுதல்படுத்துகிறார். நான் கர்த்தர், நான் மாறாதவர் ஆகையால், யாக்கோப்பின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை என்கிறார். கர்த்தராகிய இயேசுவும் தெய்வத்தன்மை உடையவர். ஆகவே, அவர் என்றும் மாறாதவராகவே விளங்குகிறார். தமது மகத்துவமான தன்மையிலும், உள்ளான நோக்கங்களிலும், உபதேசங்களிலும், தமது அளவற்ற அன்பிலும், முழு வல்லமையிலும், இரக்க உருக்கத்திலும், கிருபை நிறைந்த புண்ணியத்திலும், பாவத்தை அவர் வெறுக்கும் வெறுப்பிலும், அவர் என்றும் மாறாதவர்.

இவ்வாறு அவர் மாறாதவராய் இருப்பதினால்தான், அவரை நாம் மாறாத தேவனாகப் போற்றுகிறோம். அவரையே நாம் நம்ப வேண்டும். அவருடைய சுவிசேஷத்திலுள்ள அருமையான சத்தியங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இம்மைக்குரியவற்றை வெறுத்து, மேலான வாழ்வுக்கரியவைகளை நாடவேண்டும். மாறாத நமது தேவன் ஒளியில் இருக்கிறபடியே இருளிலும் இருக்கிறார். அவர் நமது மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்பதுபோலத்தான் நமது துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறார். நம்மையாயினும் தீமையாயினும் இயேசு மாறாதவர். அவர் என்றும் அன்பும் கிருபையும் நிறைந்த கிறிஸ்துதான். முதன் முதல் அவருடைய அன்பை நாம் ருசித்தபடியே இன்றும் நாம் ருசிக்கலாம். அன்று அவரில் களிகூர்ந்தவாறே இன்றும், இனிமேலும் நாம் களிகூரலாம். மாறாத இயேசு உன் ஆண்டவராயிருப்பதற்காக நன்றித் துதி அவருக்கு ஏறெடு.

யாவும் மாறிடினும்
இயேசு என்றும் மாறார்
என்றும் மாறா இயேசுவாதலால்
என்றும் அவரை நம்பிடுவேன்.