முகப்பு தினதியானம் ஏப்ரல் உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது

உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது

ஏப்ரல் 09

“உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது” 2.தெச. 1:3

இந்தப் பாக்கியம் தெசலோனிக்கேய சபையாருக்குக் கிடைத்த சிலாக்கியம். அவர்களின் விசுவாசம் அதிக அதிகமாய் பெருகிற்று. விதை செடியாகி செடி விருட்சமாயிற்று. குழந்தை வாலிபனாகி, வாலிபன் கிறிஸ்துவுக்குள் பெரியவனாவான். விசுவாசம் சத்தியத்தில் வேர் விடுகிறது. அது கன்மலைய உறுதியாய் பிடித்திக்கிறபடியால் என்ன புயல் அடித்தாலும் அறுந்துவிட முடியாது. அது உடன்படிக்கையின்மேலும், மாறாக தேவ சத்தியத்தின்மேலும் பலமாய் நிற்கிறது. முயற்சித்து அது வளருகிறது. சுவிசேஷம் செம்மையாய்ச் செய்வதனால் அது வளருகிறது. நமது விசுவாசம் வளருமேயானால் கிறிஸ்து நமக்கு அதிக அருமையானவராய் இருப்பார். அப்போது அவரைப்போலிருக்க அதிக வாஞ்சை கொள்ளுவோம். விசுவாசத்திற்கும் உணர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இன்னதென்று அறிவோம்.

கர்த்தர் வாக்கு தந்தார் என்று பிரசித்தப்படுத்தி நம்புவோம். பரிசுத்தவான்களின் மேலிருக்கிற வாஞ்சை பலப்பட்டு உறுதியாகும். தேவனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் நமக்கிருக்கும் வைராக்கியம் பெரியதாகும். தேவ வசனத்தின்மேல் அதிக வாஞ்சையும் ஆசையும் உண்டாகும். தேவ வசனத்தின்மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை இன்னும் உறுதியாகும். பரம சிந்தை நம்விசுவாசத்திற்குத்தக்கதாய் வளரும். விசுவாசம் வளர வேண்டியது மிக முக்கியம். உங்கள் விசுவாசம் வளருகிற விசுவாசமாய் இருக்கும்படி பாருங்கள்.

விசுவாசித்து நடப்பேன்
கர்த்தர்மேல் பாரம் வைப்பேன்
அவர் சொல்வதை நம்புவேன்
அதுவே போதுமென்றிருப்பேன்.