முகப்பு தினதியானம் நான் இரக்கம் பெற்றேன்

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.