முகப்பு தினதியானம் ஒகஸ்ட் கடைசிச் சத்துரு

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.