முகப்பு தினதியானம் செப்டம்பர் எங்களை எப்படிச் சிநேகித்தீர்

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23

“எங்களை எப்படிச் சிநேகித்தீர்” மல். 1:2

இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச் சிநேகித்தார் என்று கேட்டதுண்டா? அவர் உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக மரிக்கத் தம்முடைய குமாரனையே தந்தார். உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு போதித்து, வழிநடத்தித் தூய்மையாக்கத் தமது ஆவியானவரைத் தந்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தைப் போதிக்க தம்முடைய போதகர்களைத் தந்தார். உங்கள் துயரத்தில் உங்களை ஆற்றித் தேற்றக் கிருபையாகப் பல வழிகளைத் திறந்திருக்கிறார். உங்களுக்கு ஊழியம் செய்யச் தம்முடைய தூதர்களையும் அனுப்பியுள்ளார். உங்களைப் பாதுகாக்க உடன்படிக்கையனி; ஆணைகளையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் நித்திய காலமாகச் சுதந்தரித்து வாழத் தமது பரம வாசஸ்தலத்தையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.

உங்களைத் தமது ஆத்துமாவுக்கு அருமையாக எண்ணுகிறார். தமது ஆபரணங்கள், மகுடம், குமாரர், குமாரத்திகள் என்று அழைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறார். உலகம் வெறும் களிமண். நீங்களோ பொன் என்றும், அது பதர், நீங்கள் கோதுமை மணி, அதுவுமன்றி நீங்கள் ஆடுகள், அது பாம்பு. நீங்கள்புறாக்கள் என்று கூறுகிறார். உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவைக் கவனியுங்கள். அவர் உங்கள் பிதா. இயேசு உங்கள் உடன்பிறப்பு. நண்பன். உங்களுக்காகப் பரிந்துரைப்போர், தலைவர், மன்னர், உங்களுக்கு மன்னிப்பை அருளினார். பரம நன்மைகளால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆச்சரியமான அவருடைய அன்பிற்கு ஒப்பில்லை.

என்றும் நன்றியுடன்
நானிருக்க அருளும்
உமதன்பிற்காகத் துதித்து
உமதிரக்கத்திற்காய் நன்றி சொல்வேன்.