ஓகஸ்ட் 03
“எப்பொழுது என்னிடத்தில் வருவீர்.” சங். 101:2
தேவனுடைய சமுகம்தான் தேவ பிள்ளைக்குப் பரவசம். இதை விட அவர்களுக்குப் பெரிய சந்தோஷம் கிடையாது. அவர்கள் விரும்புகிறபொருள் அவர்தான். இதுவே அவர்களின் சந்தோஷத்தின் ஊற்று. அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஜீவனும் அவரே. அவர் இருந்தால் எல்லாமே இன்பம்தான். அவரின்றி அவர்களுக்குத் திருப்தியே கிடையாது. ஆத்துமாவிற்கு அமைதியே கிடையாது. இதற்கு அநேக காரணங்கள் உண்டு. அவருடைய தயவுதான் அவர்களுக்கு ஜீவன். அவரோடு ஐக்கியப்படுவதுதான் அவர்களுக்குப் பொக்கிஷம். அதுவே அவர்கள் சமாதானம். நேசரின் சமுகத்தில் நிறைவான சந்தோஷமும், இளைப்பாறுதலும், ஜெயமும் உண்டு. அவர் இருந்தால் அவர்களின் பரிசுத்தம் விருத்தியடையும். அவர்களின் விசுவாசம் பெருகும். கிருபை என்னும் கனி பழுக்கும். அவர்களின் பக்தி மேன்மையானது என்று அது ரூபிக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில்தான் கர்த்தர் தமது ஜனத்தை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் சில சமயங்களில் அவருடைய சமுகத்தை இழந்து விடுகிறார்கள். ஆனால் ஒருமுறை அனுபவித்தபடியால் அதன்மேல் திரும்பவும் வாஞ்சை கொள்கிறார்கள். அப்படி வாஞ்சித்து, கெஞ்சி வருத்தப்படுகிற ஆத்துமா திருப்தியடையாமல் போகாது.
என் சிநேகிதரே, தேவ சமுகத்தை நீ ருசித்ததுண்டா? அதை அனுபவித்ததுண்டா? இன்று அதில் நீ இருந்ததுண்டா? இதைவிட உனக்கு உதவி செய்வது தேறொன்றுமில்லையே. தாவீதுபோல் என் ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறதென்றும்ஈ என்னிடத்தில் எப்போது வருவீர் என்றும், நான் பிழைத்து இருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. உமது வேதம் என் மனமகிழ்ச்சி என்று நீர் சொல்கிறவரா? இப்படி ஒருவேளை நீர் தேவ சமுகத்தைக் குறித்து கவலையற்றவரானால் நீர் தேவனுக்கு அந்நியனே.
கர்த்தாவே உமதுமேல்
என் ஆவி வாஞ்சைக் கொள்கிறது
நீரே என்னை நிரப்பும்
என் தாகத்தைத் தீர்த்திடும்.