முகப்பு தினதியானம் ஒகஸ்ட் தேவன் பிரியமானவர்

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08

“தேவன் பிரியமானவர்” கலா. 1:15-16

அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய சித்தத்தினால் ஆனது என்கிறார். சவுலைப் பவுலாக்கி அவன் காரியத்தில் கிருபையைக் காண்பித்தது தேவ தயவு தான். இந்தத் தயவுக்கு அவன் பாத்திரன் அல்ல. தேவன் இப்படிச் செய்ய தேவனை ஏவிவிடத்தக்கது அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் தேவனுக்குப் பிரியமானபடியால், அவர் சித்தங்கொண்டிபடியால் அப்படி செய்தார். மற்றவர்களைக் காட்டிலும் நாம் வித்தியாசமானவர்களா? முன் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் வித்தியாசம் உண்டா? அப்படியானால் மற்றவர்களுக்குக் கிடைக்காதவைகள் நமக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. தேவனுடைய சுத்த கிருபையே அவரின் சுயசித்தமே இதற்குக் காரணம் ஆகும்.

அவர் யார்மேல் இரக்கமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார். யார்மேல் பிரியமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் பிரியமாயிருக்கிறார். தகுதியே இல்லாத நம்மை தேவன் நேசித்து தகுதிப்படுத்தி பிரியமாயிருக்கிறார். தங்கள் பாத்திர தன்மைக்கு அதிகமாகவே எல்லாருக்கும் கிடைத்திருப்பதால் முறுமுறுக்க எவருக்கும் நியாயமில்லை. சிலருக்கு அதிக தயவு கிடைத்திருக்குமென்றால் அதற்கு நன்றியுள்ளவர்களர் இருப்பது அவர்களது கடமை. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைத்திருக்கிறார். சாந்தகுணம் உள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார். கர்த்தர் உங்களையும் தமது ஜனமாக்கிக் கொண்டார். அவர் தமது மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

கர்த்தருக்கே மகிமை
எனக்கு வேண்டாம் பெருமை
அவர் பாதம் தாழ்ந்து பணிந்து
கிருபைக்கு நன்றி கூறுவேன்.