முகப்பு தினதியானம் சமாதானத்தோடே போ

சமாதானத்தோடே போ

மார்ச் 24

“சமாதானத்தோடே போ.” லூக்கா 7:50

உண்மையான சமாதானம் பாவமன்னிப்பிலிருந்து உண்டாகிறது. தேவன் கிறிஸ்துவினால் நமது அக்கிரமங்களையல்லாம் மன்னித்துவிட்டாரென்று நாம் விசுவாசிக்கும்போது நமது ஆத்துமா அந்தச் சமாதானத்தை அனுபவிக்கும். நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டபடியினால் தேவ சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். தேவனைப்பற்றி நாம் பயப்படவேண்டியதில்லை. நம்மை மன்னித்துவிட்டபடியால் நம்மீது அவர் குற்றஞ்சுமத்தமாட்டார். அவர் நமக்கு நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்க்கலாம். தம்முடைய குமாரனiயே தந்தவர், சகலத்தையும் நமக்கு இலவசமாய்க் கொடாமல் இருப்பாரா? நாம் எத்தீங்குக்கும் பயப்படாமல் எந்த நன்மையும் கிடைக்கும் என்று அவரை விசுவாசித்திருந்தால் நாம் சமாதானமாய் இருக்கலாம்.

இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை மன்னித்து சமாதானத்தோடே போ என்று சொன்னதுபோல் நம்மையும் பார்த்துச் சொல்லுகிறார். சாத்தான் சொல்வரை கவனியாதே. மனிதனின் செயல்களில் அக்கறைக்கொள்ளாதே. பயப்படாமல் உன் கடமையைச் செய் . துன்பமும் சோதனையும் நேரிட்டால் அவைகளைச் சகித்துக்கொள். தேவ பக்திக்குரிய சிலாக்கியங்களை அனுபவி. மோசங்கள் சூழலாம். பெலவீனங்கள் பெருகலாம். ஆனாலும் சமாதானத்தோடே போ. தேவன் உன்னை ஏற்றுக்கொள்வார். நீ தேவனோடு ஒப்புவாக்கப்பட்டபடியால் தேவ நாமத்தை பிரஸ்தாபம்பண்ணு. யேகொவாவின் அன்பையும் மன்னிப்பையும் எங்கும் போய் சொல். அவர் சொல்வது உண்மை என்று சாட்சி சொல். உன்னால் உன் சத்துருக்கள் எல்லாரையும் ஜெபிக்க வைக்க முடியும். இன்று சமாதானமாய் இளைப்பாறு. தேவன் என்னோடு இருக்கிறார் என்று சொல்லி உன்னை ஆற்றித் தேற்றிக்கொள். அவர் சமாதானத்துடன் போ என்கிறார்.

என்னை அன்பாய் பாருமே
என் துக்கத்தை நீக்கிடும்
பயம் சந்தேகம் போக்கிடும்.
சமாதானம் கூறிடும்.