ஏப்ரல் 13
“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது” லூக்கா 10:20
எத்தனை பெரிய பரம சிலாக்கியம் இது. தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுதலும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டு ஜீவபுத்தகத்தில் பேர் எழுதப்பட்டிருத்தலும், எருசலேமில் உயிருள்ளோருடன் சேர்க்கப்படுவதும்தான் எத்தனை பெரிய பாக்கியம். தெரிந்துக் கொள்ளப்படுதலே கிருபையின் முதல் காரியம். நாம் கிறிஸ்துவில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். நாம் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டோம். நமது இரட்சிப்பு அவர் கையில் ஒப்புவிக்கப்பட்டது. நமது செயல்கள் அவர் பாதுகாப்பில் இருக்கிறது. நமது பெயர்களும் தேவனுடையவர்களோடு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவன் நம்மீதும் நினைவுக்கொண்டிருக்கிறாரென்று நாம் சந்தோஷப்பட வேண்டியவர்கள். தேவன் நம்மை நினைத்தார். நித்திய ஜீவனுக்கென்று நம்மை நியமித்தார். நமது குறைகளுக்காக உடன்படிக்கையில் நிறைவுகளை சேர்த்து வைத்திருக்கிறார். விலையேறப் பெற்றதும், பெரியதுமான வாக்குத்தத்தங்களைத் தந்திருக்கிறார்.
அவருடைய பட்டயம் நமது பாதுகாப்பிற்கு நீட்டப்பட்டிருக்குpறது. அவருடைய நாமம் நமது ஞாபகத்தில் எப்போதும் எழுதப்பட்டிருக்கவேண்டும். அவருடன் எப்போதும் இருக்க வேண்டியதால் பரிசுத்தமே நமது வாழ்க்கையின் கடமையென்றிருப்போம். எவரும் தான் தெரிந்துக்கொள்ளப்பட்டவர் என்றால், அதினால் உண்டாகும் கனியினால்தான் அறிந்துக்கொள்ள முடியும். அந்தக் கனிகளில் பரிசுத்தம் மிக விசேஷித்தது. நாம் பரிசுத்தமாய் இல்லாவிட்டால் நமது பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு பொருள் இராது. நமது மனமும், நம்பிக்கையும், விருப்பமும் பரலோகத்தைப்பற்றி இல்லாது இருக்குமானால், நம் பெயர் அங்கு இருப்புதைப்பற்றி சந்தேகப்பட வேண்டும்.
அநாதி சிநேகத்தால் என்னை
மீட்டு முற்றும் இரட்சித்தீர்
ஜீவ புத்தகத்தில் என் பெயரை
எழுதி முத்திரையிட்டீர்.