முகப்பு தினதியானம் ஒகஸ்ட் உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்

உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்

ஓகஸ்ட் 16

“உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்” சங்கீதம் 89:16

இவர்கள் தேவனுடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். நமக்கென்று ஒரு நீதியே கிடையாது. அவரே நமக்கு நீதியைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்த நீதியை இலவசமாய்த் தருகிறார். இந்த நீதியை விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறோம். நமது கிறிஸ்தவ மார்க்கம் விசேஷமானது. நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் ஞானத்தினால் நாம் ஞானிகளாகிறோம். நம்முடைய மூத்த சகோதரன் இயேசுவால் நாம் ஐசுவரியவான்களாகிறோம். நம்முடைய இரட்சகரின் நீதியால் நாம் நீதிமான்களாகிறோம். இந்தச் செய்தி நியாயப்பிரமாணத்தை மேன்மைப்படுத்தி, ஆத்துமாவைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது. இந்த நீதியில் நாம் குற்றவாளி என்று தீர்க்கிற நியாயப்பரமாணத்தின் வல்லமைக்கும் சாத்தானுடைய பொல்லாத தந்திரத்திற்கும், கொடிய உலகத்துக்கும், மரணத்தின் பயங்கர வேதனைக்கும் மேலாக உயர்த்தப்படுகிறோம்.

இது சமாதானத்திற்கும் தேவ நேசத்திற்கும் புத்திரசுவிகாரத்திற்கும் தேவ சமுகத்து நம்பிக்கைக்கும், கிறிஸ்துவோடு உன்னத ஸ்தலத்தில் உட்காருகிறதற்கும், நித்திய மகிமைக்கும் நம்மை உயர்த்துகிறது. இது தேவனுடைய தன்மைபற்றியும், கிறிஸ்துவின் அன்பான கிரியைபற்றியும் மேலான எண்ணம் கொள்ளச் செய்கிறது. நாம் இந்த நீதியை மதித்து, நித்தம் தரித்துக் கொண்டு தேவன் நம்மை அங்கீகரிக்கிறதற்கு நன்றி சொல்வோமாக. இந்த நீதி நம்முடைய கலியாண வஸ்திரம், அழியாத கேடகம், பரம வாழ்வை நம்மை சுதந்தரிக்கச் செய்யும் பத்திரம். இந்த நன்மை நம்மை ஷேமப்படுத்தி, ஆறுதல்படுத்தி, பலப்படுத்தி, மேன்மைப்படுத்துகிறது.

எல்லாரும் பட்டு வஸ்திரம்
உடுத்தி மகிழட்டும்
என் போர்வை கிறிஸ்துவின் நீதியே
இது என்றும் எனக்குள்ளதே.