மார்ச் 03
“கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்.” 1.பேதுரு 1:14
தேவன் என் தகப்பன், நான் அவரின் பிள்ளை என்று ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் பிரியத்தோடு உணரவேண்டும். அவர் ஒரு பிள்ளையைப்போல் அவனை நடத்துகிறார். என் பரமபிதா எனக்கு வேண்டியதெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறார். பாவியான ஒருவன் பக்தனானபோது இயேசுவிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. இயேசுவிலுள்ளதெல்லாம் அவனுக்காகதான். இயேசுவின் நிறைவிலிருந்து கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீயோ அவர் பிள்ளைப்போல் பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவதுதான் உன் கடமை. உனக்கு வேண்டியதெல்லாம் உன் பிதா தருவார். அவர் சொல்படி செய்வதுதான் உன் வேலை. பின்னால் நடக்கப்போவதைப்பற்றி கவலைப்படாதே. எந்த விஷயத்திலும் பிதாவின் சித்தம் மட்டும் தெரிந்து கொண்டால் அதுவே அவர் திட்டப்படி செய்ய சுலபமாயிருக்கும். உனக்கு இருக்கும் nரிய கௌரவம் தேவன் உனக்கு தகப்பனாயிருப்பதுதான். உன்னை சொல்லமுடியா அன்பினால் ஒருவர் நேசிக்கிறார். அதுவே உனக்குப் பாக்கியம். அவர் பாதம் அமர்ந்து காத்திருக்கும்போது இன்னும் உன்னை நேசிக்கும் பிதா, சகல ஞானத்திலும் அறிவிலும் வல்லமையாலும் நிறைந்த பிதா உனக்கு இருக்கிறார் என்று நினை. இதுவே உனது மகிழ்ச்சி. பிள்ளையைப்போல உன் மனதை அவருக்கு ஒப்புவி. உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டுவிடு. அப்போது உனக்கு ஆசீர்வாதமும், ஆறுதலும் நிச்சயமாய் கிடைக்கும். உனக்கு வேண்டியதெல்லாம் தாராளமாய்ப் பெற்றுக்கொள்வாய்.
கர்த்தாவே எனக்கிரங்கி
எனக்குத் தயை காட்டி
குறைவையெல்லாம் நீக்கி
என்மேல் நேசம் வைத்திடும்.