முகப்பு தினதியானம் ஒகஸ்ட் என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

ஓகஸ்ட் 19

“என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று” சங்.77:2

கர்த்தர் தமது ஜனத்திற்கு தேவையானதும் போதுமானதுமான ஆறுதலைச் சவதரித்து வைத்திருக்கிறார். தம் பிள்ளைகளின் அவசர நேரத்தில் தேவைப்படுகிற ஆறுதல் சொல்பவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சில வேளைகளில் அவர்கள் ஆறுதல் மொழிகளைக் கேட்க மறுக்கின்றனர். ஒருவேளை தேவன் அவர்கள் விக்கிரமாகப் பாவித்த ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துப்போட்டிருப்பார். விசுவாசத்தினால் ஜீவனம்பண்ணும்படி தம் முகத்தை மறைத்திருக்கலாம். அல்லது இவ்வுலக காரியங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தாங்கள் நம்பியிருந்தவற்றின்மேல் மாயை என்று எழுதி இருக்கலாம். யோனாவைப்போல் இவர்கள் கோபத்திற்கு இடம் கொடுத்து இருப்பார்கள்.

அல்லது பெருமை தங்களிலே ஆளும்படி இடம் கொடுத்திருப்பார்கள். ராகேலைப்போல கவலைக்கும் அதிகம் இடங்கொடுத்திருப்பார்கள். அல்லது சோதனைக்குள் விழுந்திருப்பார்கள். தவறுகளை அதிகம் செய்திருப்பார்கள். இது முழுவதும் தவறு. சுவிசேஷத்தில் உனக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார். மோட்சத்தின் மேன்மையைப் பார். சங்கீதக்காரன் இவ்வாறு தன்னையே நோக்கி, தன்னைத் தேற்றிக் கொண்டான். தன் பாவத்திற்காகத் துக்கப்பட்டான். தன் எண்ணத்தையும், நடத்தையையும் சீர்திருத்திக் கொண்டான். நமக்குப் போதனையாகவும், எச்சரிப்பாகவும் விழிப்பு உணர்ச்சி ஏற்படவும் இந்தச் சங்கீதத்தை எழுதியிருக்கிறான். ஆறுதலைப் பெறக்கூடியவர்களும் தங்குள் தவறுகளால் ஆறுதலை அனுபவியாமல் போகிறார்கள். கர்த்தரின் ஜனங்கள் அடிக்கடி தங்களையே வாதித்துக் கொள்கிறார்கள். ஆறுதலின் பாத்திரத்தைத் தங்களைவிட்டு அகற்றி தாங்கள் அதற்குப் பாத்திரர் அல்ல என்கிறார்கள்.

சகல நன்மைக்கும் ஊற்றே
துக்கம் நீங்கி ஆற்றிடும்
மறுமையில் சேரும்போது
வாழ்ந்தென்றும் சுகிப்பேன்.