ஓகஸ்ட் 21
“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28
விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.
அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.
இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.