முகப்பு தினதியானம் ஜனவரி கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்

ஜனவரி 20

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்.” நீதி. 2:6

ஞானத்தைத் தருமுன்னே அது நமக்குத் தேவை என்று, அதன் மேல் வாஞ்சைக்கொண்டு அவருடைய பாதத்தருகில் அமர்ந்து கருத்தாய் கேட்கவேண்டும். நாம் பயபக்தியாய் நடக்கவும், சோதனைகளை வெல்லவும், தேவனுடைய பண்ணையில் செம்மையாய் வேலை செய்யவும் நமக்கு ஞானம் வேண்டும். அவருடையவர்களாகிய நமக்குச் சரீரத்திலும், ஆவியிலும், ஆத்துமாவிலும் தேவனை மகிமைப்படுத்தவும், அவரைச் ஸ்தோத்தரிக்கவும் ஞானம் தேவை. நமக்கு தேவையான ஞானத்தைக் கிரியையினாலல்ல, ஜெபத்தினால் பெற்றுக்கொள்ளலாம். அது நம்மால் உண்டாவதல்ல. தேவனே இதைக் கொடுப்பேனென்று வாக்களித்துள்ளார்.

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறை உள்ளவனாக இருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனால் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்.’ தேவன் செய்வார் என்று நாம் விசுவாசித்து அதை அவரிடத்தில் கேட்க வேண்டும். அவர் பொய் சொல்லா உத்தமர். ஆகவே, கொடுப்பார். தேவன் கொடுக்கும் ஞானம் மகா மேன்மையுள்ளது, பயனுடையது. முக்கியமான பிரசித்திப் பெற்றது. பரத்திலிருந்து வரும் ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இரக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயும் இருக்கிறது.
நீ இரட்சிப்படைய ஞானியாக வேண்டுமா? ஆத்துமாக்களை ஆதாப்படுத்தும் ஞானியாக வேண்டுமா? பொல்லாப்பை வெறுத்து எல்லா நம்மைகளையும் பெற்றுக்கொள்ள ஞானியாக வேண்டுமா? அப்படியானால் தேவனிடத்தில் ஞானத்தைக் கேள். இப்பொழுதே கேள். கருத்தாய் கேள். விசுவாசத்தோடே கேள். அப்பொழுது உனக்குக் கொடுக்கப்படும்.

சாந்தம், தாழ்மை, சுத்தம்
இதோடு சேர்ந்த ஞானம்
எனக்களித்தால் அப்போ
உமக்கு பிரியனாவேனல்லோ?