அக்டோபர் 03
“விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்” ரோமர் 14:1
இந்த வார்த்தைகள் சில நேரங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. தேவனுடைய ஜனங்கள் அவருடைய வார்த்தையைப் பற்றி அறிய வேண்டிய முறைப்படி சரியாக, ஆழமாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதனால், அவர்களது விசுவாசம் பெலனற்றும் போகிறது. ஆண்டவர் அருளிய வாக்குகள், தேவத்துவத்தின் மகத்துவங்கள் போன்றவைகளை இவர்கள் நன்கு விளங்கிக் கொள்வதில்லை. இதனால் இவர்கள் பயம், சந்தேகம் ஆகியவற்றால் கலங்குகிறார்கள். தெளிவான, சரியான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்களானால், தேவ மகிமையைப் பற்றின நம்பிக்கையில் என்றும் மகிழ்ந்திருப்பார்கள்.
தேவன் உங்களை அங்கீகரிக்கவேண்டுமானால், லேசான விசுவாசம் போதாது. ஆழ்ந்த விசுவாசம் தேவை. தேவனுக்குள் மகிழ்ந்திருக்கவேண்டுமானால், தேவ வசன அறிவில் பலப்பட வேண்டும். அவரில் திடன் அடைய வேண்டும். அப்பொழுதுதான் விசுவாசத்தில் பெலப்படமுடியும். பெலன் கர்த்தரின் பேரில் வைக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. உங்கள் செயல்களையெல்லாம் கர்த்தருக்காகவே செய்ய வேண்டும். நீங்கள் அவருக்கே சாட்சிகளாயிருக்கவேண்டும். சந்தேகங்கள், விசுவாசத்தின் பெலன் குறைந்து விடுகிறது. தேவனுக்கு ஊழியம் செய்யாதிருக்கும்பொழுது உங்கள் திடனை இழந்து விடுகிறீர்கள். ஜெபத்தில் உறுதியாகத் தரித்திராதபொழுது உங்களுக்கு அவர் தரும் பெலன் கிட்டுவதில்லை. தேவ கிருபையை நீங்கள் சார்ந்திராதபொழுது, அவருடைய கிருபை உங்களை வந்தடைவதில்லை. எனவே, சகோதரரே, நாம் தேவனால் அங்கீகரிக்கப்படுவது தேவ கிருபையே. நமது ஆத்துமாக்கள் கிறிஸ்துவையே நோக்கியிருக்கட்டும். அவரையே நாம் என்றும் சார்ந்திருப்போம்.
நீ பெலவீனனானால் இயேசுவைப்பிடி
உன் பெலவீனம் நீங்க அவரையே பிடி
உன் பெலவீனம் நீக்க வந்திடுவார்
அவரில் விசுவாசங்கொண்டிரு.