முகப்பு தினதியானம் அக்டோபர் கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18

“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9

நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.

எந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.

கர்த்தாவே, நான் பெலவீனன்,
உம்மையே பற்றிப் பிடிப்பேன்
நீர் என் துணை, என் நண்பன்
நான் வெற்றி பெற்றிடுவேன்.