முகப்பு தினதியானம் எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

மார்ச் 12

“எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்.” 1.தெச. 4:17

தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர் நமக்கு வெளிப்படுத்துவது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறதாயிருக்கிறது. சந்தோஷத்தை வளர்க்கிறதாயுமிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நம்மை தமது பரம வீட்டிற்கு கொண்டு போக திரும்ப வருவார். ஒருவேளை அதற்கு முன்னே நமக்கு மரணத்தை அனுப்பினாலும் அனுப்பலாம். நாம் சரீரத்தை விட்டு பிரிந்து போய் கிறிஸ்துடன் இருக்க வேண்டியது வரும். நமது நிகழ்காலத்தைவிட அதுவே மிகவும் நல்லது. அப்படியேயானாலும் அவர் சீக்கிரம் வந்து நம்முடைய சரீரங்களைக் கல்லறையினின்று எழுப்பி நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் அவருடைய சாயலுக்கு ஒப்பாக்கும்போது, நாம் ஆகாயத்தில் அவரைச் சந்திக்கக் கொண்டுபோகப்பட்டு எப்போதும் கர்த்தரோடிருப்போம். இதுதான் நமக்கு மோட்சம். இதுதான் நமது பங்கு. நாம் அவரைப்போல அவராடிருப்போம். நமது இப்போதைய நிலைக்கு அது வித்தியாசமானது. இது அதிக மகிமையான காட்சி.

என்றைக்கும் கர்த்தரோடிருப்பதில் அடங்கா மகிமை உண்டு. எப்போதும் அவரோடிருப்பதில் துன்பமும் இல்லை. மகிமையைக் குறித்து தியானித்து, சந்தோஷம் நிறைந்த இந்த மாறுதலை நோக்கி பார்த்துக்கொண்டே இந்த நாளை முடிப்போமாக. இனி வருத்தத்தையும் துன்பத்தையும் பார்ப்பது சரியல்ல. நான் சீக்கிரம் கர்த்தரோடிருப்பேன் என்று சொல்லுவோம்.

என்றும் தேவனோடிருப்பது
ஆனந்த மகிழ்ச்ச
அதுவே பேரின்ப வாழ்வு
இதுவே நித்திய பேறு.